வைகோ, வீரமணி, திருமா மீது வழக்குப்பதிவு

எழுவர் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது தொடர்பாக
வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது கிண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தீர்மானம் இயற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இதுவரை ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. ஏழு பேரையும் ஆளுநர் உடனே விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, கடந்த 3ஆம் தேதி மதிமுக, திக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
வைகோ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, முத்தரசன், திருமாவளவன், வேல்முருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கெட் அவுட், கெட் அவுட் புரோகித் கெட் அவுட் என்று ஆளுநரை தமிழகத்தை விட்டு வெளியேற வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பேசிய வைகோ, “நக்கீரன் கோபால் மீது வழக்கு போட்டது போல என் மீதும் வழக்கு போடுங்கள், இங்கே சொன்னதைத்தான் நான் நீதிமன்றத்திலும் சொல்லுவேன். சிறைக்கு அனுப்பினால் செல்வேன்” என்று ஆவேசமாகப் பேசினார். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல் துறை, மாலையில் விடுவித்தது.
இந்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக வைகோ, கி.வீரமணி, டி.கே.எஸ்.இளங்கோவன், திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தியாகு, திருமுருகன் காந்தி உட்பட 687 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவர்களின் மீது போக்குவரத்துக்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.