திருப்பூரின் வளர்ச்சி நம்பிக்கையளிக்கிறதா?

ஜிஎஸ்டியும், பணமதிப்பழிப்பும் திருப்பூரின் வளர்ச்சியை கடுமையாகப் பாதித்திருக்கும் சூழலில், உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கண்டுவரும் நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 6ஆவது இடத்தைப் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக சிஸ்மா பொதுச் செயலாளர் பாபுஜி கூறுகிறார்.

2019 முதல் 2035 வரை உலகின் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருப்பூர் ஆகிய 3 நகரங்கள் முதல் 10 நகரங்களுக்குள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தின் மெட்ரோ நகரமான சென்னையைக் காட்டிலும் (8.17%), இரண்டாவது பெரிய நகரமாகத் திகழும் திருச்சியைக் காட்டிலும் (8.29%), திருப்பூர் (8.36%) கூடுதல் வளர்ச்சியுடன் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதுகுறித்து தென்னிந்திய காலர் சட்டைகள் மற்றும் உள்ளாடைகள் சிறு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளரான கே.எஸ்.பாபுஜி மின்னம்பலத்திடம் பேசுகையில், “உலக அளவில் பொருளாதார வளர்ச்சியில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக திருப்பூர் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. உலக அரங்கிலும் சரி, உள்நாட்டு வர்த்தகத்திலும் சரி மிகப்பெரிய போராட்டத்தை திருப்பூர் கண்டு வந்தாலும், பின்னலாடைத் தொழிலில் தங்களுக்கென ஓர் இடத்தை தக்கவைத்துக் கொண்டே வந்து கொண்டிருக்கிறோம். இந்தப் தொடர் போராட்டத்தில் தொழிலாளர்களின் பங்களிப்புதான் முக்கியமானது. தொழிலாளர்களின் உழைப்பும், முதலீட்டாளர்களின் முயற்சியும் இன்றைக்குப் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் உலகின் 6ஆவது பெரிய நகரம் என்ற பெருமையைக் கொடுத்திருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பல ஆண்டுகளாகப் பின்னலாடை உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் உலகின் முதன்மை நகராகத் திகழ்கிறது திருப்பூர். ஆக்ஸ்ஃபோர்டு எகனாமிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை திருப்பூர்வாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், மிகக் கடுமையான நெருக்கடியில்தான் இத்தொழிலை மேற்கொண்டு வருவதாகவும், திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்குக் கூடுதலான உள்கட்டமைப்பு வசதிகளையும், சாதகமான சூழலையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென்றும் பின்னலாடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக்கண்ணன் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “உண்மையில் இந்த அறிக்கையானது மிகவும் அதிர்ச்சியாகத்தான் உள்ளது. வளர்ச்சி என்பது போதுமான உள்கட்டமைப்பு வசதிகள், மக்களின் வாங்கும் திறன் மற்றும் சிறப்பான தனிநபர் வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த அறிக்கை அப்படியானதாக இல்லை. தற்போது திருப்பூரின் மக்கள் தொகை 10 லட்சமாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, சட்டம்-ஒழுங்கு நிலைகளைப் பாதுகாக்க போதுமான காவல் துறை கூட இங்கு இல்லை” என்று கூறியுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் ஒன்றிய அரசால் அமல்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) திருப்பூரின் வளர்ச்சியை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளதாகவும், இதனால் பல சிறு குறு நிறுவனங்கள் தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாகவும், மாற்று வேலைகளுக்குப் பலர் சென்றுவிட்டதாகவும் கூறுகிறார் பாபுஜி.
அதைப்பற்றி பாபுஜி நம்மிடம் மேலும் பேசுகையில், “பணமதிப்பழிப்பு மற்றும் ஜிஎஸ்டிக்குப் பிறகு திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சுமார் ரூ.4,000 கோடி சரிந்துள்ளது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு ரொக்கப் பண நெருக்கடியால் திருப்பூர் மாநகரில் சுமார் 30 விழுக்காடு சிறு குறு நடுத்தர நிறுவனர்கள் முதலீடு செய்ய இயலாமல், தொழிலை நிறுத்தி விட்டு வேறு நிறுவனங்களுக்கு சூப்பர்வைசர்களாக செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
மேலும், “வெறும் எண்களை வைத்து வளர்ச்சி கண்டுவிட்டோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. அது கண்களில் பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறதே தவிர, உன்னிப்பாகப் பார்த்தால் வளர்ச்சி நிலையில் உண்மையில் கவலைதான் அளிக்கிறது. என்ன நிலையில் தொழில் வளர்ச்சி இருக்கிறது என்பதை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு உண்மையாக ஆய்வுசெய்து அறிவிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை என்னவென்பது தெரியும்” என்றார்.

No comments

Powered by Blogger.