இளங்கோவன் தலைவராக வர மாட்டார்: திருநாவுக்கரசர்

“தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். ஆனால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைவராக வரப்போவதில்லை” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக திருநாவுக்கரசர் பொறுப்பேற்றது முதல் அவருக்கும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு நீடித்துவருகிறது. விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்பது உள்பட திருநாவுக்கரசர் குறித்து பல்வேறு விமர்சனங்களையும் இளங்கோவன் தொடர்ந்து முன்வைத்துவருகிறார். அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்று இளங்கோவன் தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று (டிசம்பர் 8) செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், “தலைவர் மாற்றம் குறித்து தமிழக காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் யாரும் பேசுவதில்லை. இளங்கோவன் மட்டும் இதனை வழக்கமாகவே செய்துகொண்டிருக்கிறார். என்னை மட்டுமல்ல அவர் யாரைத் திட்டாமல் விட்டிருக்கிறார். சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், கே.வி.தங்கபாலு, செல்லகுமார் என பொறுப்பில் இருப்பவர்கள் அனைவரையும் வசைபாடுவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.
மேலும், “என்னை மாற்றுவதற்கு இளங்கோவன் ஓயாமல் டெல்லி சென்றுகொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள், அவர் முயற்சி செய்யட்டும். முடிந்தால் தலைவரை மாற்றம் செய்துவிட்டு வரட்டும். ஆனால் அவர் தலைவராக வரப்போவதில்லை என்பது உறுதி. நான்தான் தேர்தல் வரை தலைவராக இருப்பேன்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இளங்கோவன் பதில்
முன்னதாக நேற்று முன்தினம் ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். ராகுலின் அழைப்பின் பேரிலேயே அவர் டெல்லி சென்றுள்ளார் என்றும், அவருக்கு தமிழக காங்கிரஸில் முக்கிய பொறுப்பு ஒதுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “என் மீது இவ்வளவு காதலை வைத்திருப்பதற்கு திருநாவுக்கரசருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தலைவராக யாரை நியமிப்பது என்பதை ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும்” என்று பதிலளித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.