நானாட்டானில் கடல் நீர் வீடுகளுக்குள் உட்புகும் அபாயம்

மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மக்கள் தெரிவித்த முறைப்பாட்டை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை குறித்த பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது அச்சங்குளம் பகுதியில் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதாக அப்பகுதி மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனால் நோய் தொற்றுக்கள் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதோடு தென்னை மற்றும் பயன் தரும் மரங்களும் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
எனவே குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் ஊடாக குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்று கொடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments

Powered by Blogger.