ஹாக்கி உலகக் கோப்பை காலிறுதியில் இந்தியா!

ஹாக்கி உலகக் கோப்பையின் கடைசி குரூப் போட்டியில் கனடாவுக்கு எதிராக மோதிய இந்திய அணி, 5-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. குரூப் சி-யில் முதல் அணியாக தேர்ச்சி பெற்றுள்ள இந்தியா, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இந்திய கனடா அணிகள் மோதிய முக்கிய போட்டி இன்று நடைபெற்றது. குரூப் சி-யை சேர்ந்த இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகள், இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு டிரா என 4 புள்ளிகளுடன் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ளன. முதல் போட்டியில், இந்தியா 5-0 என வெற்றி பெற்றதால், அதிக கோல் முன்னிலையில், முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், இன்று பெல்ஜியம் - தென்னாப்பிரிக்காவவுடனும், இந்தியா - கனடாவுடனும் மோதின.

முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதிக்கு முன்னேறும் என்பதால், கட்டாயம் வெல்ல வேண்டிய சூழ்நிலையில், இந்தியாவும் பெல்ஜியமும் இருந்தன. முதலாவதாக நடைபெற்ற போட்டியில், பெல்ஜியம் அணி, தென்னாப்பிரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனால், கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில் இந்தியா களமிறங்கியது.

துவக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி விளையாடியது இந்திய அணி. 12வது நிமிடத்தில் ஹர்மான்ப்ரீத் சிங் கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பின் பல வாய்ப்புகள் கிடைத்தும் இந்தியா கோல் அடிக்காமல் மிஸ் செய்தது. முதல் பாதி 1-0 என முடிந்தது. அதன்பின், 39வது நிமிடத்தில் கனடா வீரர் ப்ளோரிஸ் வான் சன் கோல் அடித்தார். 3வது காலாட்டம் 1-1 என சமனாக முடிய, இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால், 4வது காலாட்டம் துவங்கியதில் இருந்து இந்திய வீரர்கள் அட்டகாசமாக பாஸ் செய்து, கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல், கோல் அடித்தனர். 46வது மற்றும் 57வது நிமிடங்களில், லலித் உபாதெய், 46வது  நிமிடத்தில் சிங்க்லென் சனா சிங், 51வது நிமிடத்தில் அமித் ரோஹிததாஸ் ஆகியோர் கோல் அடிக்க, இந்தியா 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து, இந்தியா நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கனடா, மற்றும் பெல்ஜியம் அணிகள், மற்றொரு இடைநிலை சுற்றில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும்.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.