தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா சம்மந்தனின் இடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இருக்குமாயின் தென்னிலங்கை அரசியல் தொடர்பில் தாம் நடுநிலை வகித்திருப்போம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிற்றுக் கிழமை இரவு இடம்பெறுகின்ற அரசியல் நிகழ்சியான சக்கரவியூகத்தில் கலந்துகொண்டு விசேட செவ்வியளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் பரபரப்பான அரசியல் நகர்வுகளின் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துவரும் முடிவுகள் தொடர்பில் பேசப்பட்டது. இதில் இன்றைய சூழ்நிலையில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனின் இடத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருந்தால் எவ்வாறான நகர்வுகள் இடம்பெறும் எனக் கேட்டபோது, தாம் நடுநிலை வகித்திருப்போம் என கூறினார்.

எவ்வாறாயினும் இவ்வாறு நடு நிலை வகிப்பதால் தமிழ் மக்களுக்கு விளையும் நன்மைகள் என்ன என்பது குறித்துக் கேட்டபோது,

“தென்னிலங்கையில் நடகின்ற குழப்பங்களின் பின்னால் மஹிந்த மைத்திரி ஒருபக்கமும் ரணில் இன்னொருபக்கமும் என்று இல்லையே. உங்களுக்கு நன்றாக அது தெரியும். மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் பின்னால் சீனா இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பின்னால் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இருக்கின்றன. இந்த குழப்பங்களுக்குப் பின்னால் இந்தியா இலங்கையின் கிழக்கு முனையை தமது கட்டுப்பாட்டுக்கு எடுக்க கேட்டிருக்கிறது. மேற்கு முனை ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட்டுவிட்டது. அதேபோல பலாலி மற்றும் மத்தல விமான நிலையம் என்பவற்றை இந்தியா கேட்டுவிட்டது. இப்படிப்பட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடபடகூடாதென்றுதான் மைத்திரிக்கும் ரணிலுக்கும் பெரிய மோதல் நடந்தது. அந்த மோதலின் பின்னால்தான் இந்த குழப்பங்கள் அனைத்தும் இருக்கின்றன.

இப்படிப்பட்ட வல்லரசுகள் மோதிக்கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ் மகளின் வாக்குகள்தான் இன்றைக்கு பெரும்பான்மையைக் கொடுக்கப்போகின்றது. இலங்கைப் பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை இல்லை. அவருக்கு இருக்கக்கூடியது 105 அல்லது 106 அல்லது 107 பாராளுமன்ற உறுப்பினர்கள். அறுதிப் பெரும்பான்மை காட்டுவதற்கு 113 உறுப்பினர்கள் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 14 உறுப்பினர்கள் தேவை. அந்த 14 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கின்றனர் எனும்போதே பெரும்பான்மை வந்துவிட்டது.

அந்த அரசியல் பலம் இப்படியான ஒரு குழப்ப நிலையில் தமிழ் மக்களின் கையில் இருக்கிறது. இந்த வல்லரசுகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களது ஆதரவு கட்டாயம் தேவை. தம்முடைய நலன்களை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மகளுக்காக பேரம்பேசியிருக்கவேண்டுமா இல்லையா? இந்த சிங்கள மக்களை நம்பி 70 வருஷமாக நாங்கள் ஏமாந்தமாதிரி ஏமாறச்சொல்லி நாங்கள் கேட்கவில்லை. இந்த வல்லரசுகளிடம் இதனைப் பேரம்பேசியிருக்கலாம்.

இந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு வல்லரசுகளிடம் இதனைத் தெரிவித்திருக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் எங்களைப் பொறுத்தவரை ஒன்று. மூன்றரை வருடமாக ஆதரவு தந்தனாங்கள். அனைத்து அரசாங்கமும் எங்களை ஏமாற்றிவிட்டன. இந்தக் குழப்பங்களுக்கு ஒரு கிழமைக்கு முன்னர் மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் எத்தனையோ மேடைகளில் சொல்லியிருக்கிறார்கள் அரசாங்கம் எங்களை ஏமாத்திவிட்டன என்று. வல்லரசுகளுக்கு சொல்லியிருக்கலாம், நாங்கள் எங்கட கண்ணை மூடிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தந்துவிட்டு எங்கள் ஊருக்கு போகமுடியாது என்று. இந்த வல்லரசுகள் வந்து எங்களுக்காக ஏதாவது செய்யமுடியுமெறு வாக்குறுதி வழங்கினால் ஆதரவு கொடுக்கமுடியும் என்று கேட்டிருக்கலாம். அதை ஏன் கேட்கவில்லை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருப்பவர்கள் இந்தியாவினது முகவர்களாகவும் மேற்கு நாடுகளின் எடுபிடிகளாகவும்தான் செயற்படுகிறார்கள். வாக்களித்த தமிழ் மக்களின் நலங்களைக் கருதி வல்லரசுகளோடு பேரம்பேசுவதுதான் உங்களது பொறுப்பு. மக்களுக்கெல்லாம் தேர்தல் காலத்தில் பச்சைப் பொய்களைச் சொல்லி வாக்குகளை வாங்கிவிட்டு அந்த வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரலில் நீங்கள் இயங்குகிறீர்கள் என்றால் அதில் என்ன பிரியோசனம்?” என்றார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் மேலும் பல விடயங்களை இந்த நிகழ்வில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.