ஜாம்பவான்களுக்கு இசையமைக்கும் அனிருத்

திரையுலகிற்கு அறிமுகமாகிக் குறைந்த காலகட்டத்திலேயே ரஜினி போன்ற
முன்னணி கதாநாயகர்களின் படங்களில் அனிருத் இசையமைப்பாளராகப் பணியாற்றுவது அவரது திரைவாழ்வில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்பட்டுவரும் நிலையில் அடுத்ததாகக் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்கிறார்.
ஷங்கர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது. ஏற்கெனவே இதன் படப்பிடிப்புக்காக அரங்கு அமைக்கும் பணிகள் கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்று வருகிறது. காஜல் அகர்வால் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
பேட்ட படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில் முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றும் அனுபவம் குறித்து இன்.காம் தளத்திற்கு அனிருத் பேட்டியளித்துள்ளார். அதில், “இரண்டு பெரிய வாய்ப்புகள் கிடைத்திருப்பது சிறப்பான அனுபவம். திரையுலகில் இது எனது ஏழாவது ஆண்டு, 18ஆவது ஆல்பம், திரைத்துறையில் உள்ள இரு ஜாம்பவான்களோடு இணைந்து பணியாற்றுவது பெரிய கௌரவமாக உணர்கிறேன். இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவத்தை நானும் எனது குழுவும் அளித்து வருகிறோம்” என்று அனிருத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு அவர் தெலுங்கில் அறிமுகமான ‘அக்னியத்தவாசி’ படம் அங்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொடுத்தது. சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறாவிட்டாலும் அனிருத்தின் பாடல்கள் கவனம் பெற்றன.

No comments

Powered by Blogger.