ராஜாவின் குரலில் ‘மாரியின் ஆனந்தி

திரைப்பட உருவாக்கத்தில் உள்ள மற்ற அனைத்து துறைகளைப் போல
இசைத்துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இசை உருவாக்கத்தில் டியூனை விட புதிதுபுதிதான சத்தங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கேட்டவுடன் ஆட்டம் போடவைக்கும் படியான பாடல்களாக இவை தோன்றினாலும் விரைவில் பாடல் மக்களின் நினைவில் இருந்து அகற்றப்பட்டுவிடுகின்றது. தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாரியின் ஆனந்தி’ என்ற பாடல் இதற்கு மாறாக மனதில் நிற்கும் மெலடியாக உருவாகியுள்ளது.
மாரி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் ஆக்‌ஷன், மாஸ் காட்சிகளோடு காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளதை ட்ரெய்லரைப் பார்க்கும் போதே உணர முடிந்தது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் சாய் பல்லவி ஏற்றிருக்கும் ஆனந்தி கதாபாத்திரத்திற்கும் மாரி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நெருக்கத்தைக் கூறும் விதமாக அமைந்துள்ளது.
அராத்து ஆனந்தியாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு ஜாலியாக வலம் வரும் சாய் பல்லவி இந்தப் பாடலில் முதிர்ச்சியுடன் காதலை வெளிப்படுத்துபவராகக் காட்டப்படுகிறார். பாடலின் வரிகளும் இசையும் அதற்கு வலு சேர்த்தாலும் இளையராஜா பாடியிருப்பதால் அந்த உணர்வுகளை உடனடியாக உணர முடிகிறது.
“வானம் பொழியாம பூமி விளையுமா கூறு
பூக்கள் மலர்ந்தாலும் சூடும் அழகில்தான் பேரு
எந்தன் உயிரே நான் உன்னை பார்த்துக்கிறேன்
பட்டு துணியா போத்திக்கிறேன்
என்னை மெதுவா ஆளையே மாத்திக்கிட்டேன்
கொஞ்சம் காதல் கீதல்லாம் கூட்டிகிட்டேன்
ஜோரா நடை போட்டு வாடா என்னோட வீரா
ஆ ஆ பேரா ஆட்டோல போலாம் என்னோட மீரா
என்ற பாடல் வரிகளை தனுஷ் எழுதியுள்ளார். இளையராஜாவோடு இணைந்து எம்.எம். மானஸி பாடியுள்ளார்.
பருத்தி வீரன் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இளையராஜா பாடிய ‘அறியாத வயசு புரியாத மனசு’ பாடலை நினைவுபடுத்தும் விதத்திலும் இப்பாடல் அமைந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.