மன்னார் மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?

மன்னார் நகர நுழைவாயில் பகுதியிலுள்ள ‘சதொச’ வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா.சபை பொறுப்பேற்று, உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமென கோரி 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் பங்கேற்பதற்காக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், திருகோணமலை உட்பட 8 மாவட்டங்களிலிருந்து மக்கள் வருகை தந்திருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்துள்ளதாவது, “மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பாக ஐ.நா.சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இப்புதைகுழியில் புதைக்கப்பட்டவர்கள் யார்?, புதைத்தவர்கள் யார்? என்பது தொடர்பாக உண்மையான தகவலை வெளியிட வேண்டும்.
அந்தவகையில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதில் எமக்கு நம்பிக்கையில்லை.
எனவே மனித எலும்புக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகளையும், வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்”  என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை போராட்டத்தின் இறுதியில் ஐ.நா.சபைக்கு எழுதப்பட்ட மகஜரொன்று ஏற்பாட்டுக் குழுவினரால் வாசிக்கப்பட்டதோடு, ஐ.நா.சபைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.