சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு!

சபரிமலையில் போராட்டங்கள் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.

பக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். குறித்த தடை உத்தரவு 4ஆவது முறையாக நீடிக்கப்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. சபரிமலையில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்டகுழுவையும் நியமித்தது.

உயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் பொலிஸாரின் கெடுபிடிகளும் குறைந்தது. இதனால், போராட்டக்காரர்களும் தங்களது போராட்டங்களை நிறுத்திக் கொண்டனர்.

இந்தநிலையில், ஆய்வுக்கு சென்ற உயர்நீதிமன்ற குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்ற நிலையில், கடந்த வாரம் முதல் 50 முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், வெளிமாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ரயில் நிலையங்களில் இலவச ஓய்வு மையம் செயல்படுமென தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதனையடுத்து 500 பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.