ஜெ. நினைவு தின பேனர்கள்: நீதிமன்றம் கண்டனம்!

ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்குச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் இன்று அமைதி பேரணி சென்றனர். இதற்கு .நேற்று இரவு முழுவதும் மெரினா கடற்கரைச் சாலையில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. வாலாஜா சாலையிலிருந்து ஜெயலலிதா நினைவிடம் வரை, வழி நெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஏற்கனவே, விதிகளை மீறி பேனர்கள் வைப்பதாக உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின்போது விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இன்று (டிசம்பர் 5) நீதிபதி சத்தியநாராயணன் நீதிபதி ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு ஆஜரான டிராஃபிக் ராமசாமி ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தாங்களும் வரும் வழியில் பார்த்ததாகவும் டிஜிட்டல் பேனர்களை வைக்க யார் உரிமம் , அனுமதி வழங்கியது என்ற விவரம் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தனர். தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவை மீறி வருவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி எப்படி அனுமதித்தீர்கள் என்று மாநகராட்சி வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக நாளை மறுதினம் (டிசம்பர் 7) விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

கடந்த 29 ஆம் தேதி பேனர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், ”இனிமேல் பேனர் வைப்பவர்களை மட்டுமல்ல, அதற்கு பண உதவி செய்து உதவுபவர்களும் வழக்கில் சேர்க்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.