பின் வாங்கிய கமல், விடாத ரஜினி

திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகுவதாக மீண்டும் ஒருமுறை அறிவித்துள்ளார் கமல்ஹாசன்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் நடிகர், பாடகர், நடன இயக்குநர், இயக்குநர் எனப் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி வரும் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களைத் தவிர்த்து இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்தியன் 2 படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்றுவந்ததால் அதுவே அவரது இறுதிப் படமாக இருக்கும் எனக் கூறப்பட்டது. சமீபத்தில் தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘எனது அடுத்த படம் தேவர் மகன் 2’ என்று கமல் அறிவித்தார். கமலின் இந்த முடிவு அவர் நடிகராகத் தொடர்ந்து இயங்குவார் எனப் பார்க்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் கட்சி தொடங்கிய பின்னரும் சாதிப் பின்புலத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறாரே என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. தற்போது கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. அரங்கம் அமைக்கும் பணிகள் ஏற்கெனவே தொடங்கி ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கக் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிப்பது உறுதியாகியுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்நிலையில் கமல் டெக்கான் கிரானிக்கலுக்கு அளித்த பேட்டியில், “மக்கள் நீதி மய்யம் 2019ஆம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் போட்டியிடும். இந்தியன் 2 படத்திற்குப் பின் நான் படங்களில் நடிக்கப்போவதில்லை. எனது தயாரிப்பில் படங்கள் வெளியாவது தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெறுவதாக இரண்டாவது முறையாக அவர் அறிவித்துள்ளது மீண்டும் அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கமல் ஹாசனைப் போல அவரது நீண்ட கால நண்பரும் திரையுலகில் அவருடன் பயணித்துவருபவருமான ரஜினிகாந்தும் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் அரசியலில் இறங்குவது திரையுலகிலும், அரசியலிலும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
கமல் ஹாசனைப் போல ரஜினிகாந்தும் அரசியலில் இறங்கிய பின்னர் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து விலகுவாரா தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இந்தியா டு டே ஊடகத்துக்கு ரஜினி அளித்த பேட்டியின் போது இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர் , “ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என்று மக்கள் விரும்பும் வரை நான் படங்களில் நடிப்பேன். எனக்கு ஆற்றல் இருக்கும் வரை நடிப்பேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.