புல்லுக்கே வக்கில்லை, தாமரை மலர்ந்திடுமா? ஸ்டாலின்

தமிழகத்தில் தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேகதாட்டு அணைகட்ட அனுமதியளித்த மத்திய அரசைக் கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (டிசம்பர் 4) திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கலந்துகொண்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஸ்டாலின், ”1957ஆம் ஆண்டு விவசாயிகளுக்காக சுமார் 20 நாட்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளோடு ஒருங்கிணைந்து கலைஞர் முன்னின்று நடத்திய நங்கவரம் போராட்டத்தில்தான் உழுதவனுக்கே நிலம் சொந்தம், நாடு பாதி நங்கவரம் பாதி என்ற முழக்கத்தை முழங்கினார். முதன்முதலாக திருச்சி மாவட்டத்தில் உள்ள குளித்தலை தொகுதியில் வேட்பாளராக நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்துக்குள் நுழைந்து அங்கு தன்னுடைய முதல் பேச்சாக குரலெழுப்பியவர் கலைஞர். உழவனின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம் என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆர்ப்பாட்டம், அரசியலுக்காக அல்ல, தேர்தலுக்காக அல்ல, 1957ல் கலைஞர் சொன்னது போல் உழவனுக்காக. கஜா புயலால் ஏற்கெனவே தமிழகம் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் சூழலில் மேகதாட்டு அணை கட்ட போகிறோம் என்ற செய்தி தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சதியை செய்து கொண்டிருக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை தமிழ்நாட்டு மக்கள் ஒருகாலமும் மன்னிக்க மாட்டார்கள்” என்று ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
”ஆறாயிரம் கோடி மதிப்பீட்டில் கர்நாடக அரசு மேகதாட்டுவில் அணைகட்டினால் தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வராது. 2015 - 2016 ஆம் ஆண்டினுடைய நிதிநிலை அறிக்கையில் கர்நாடக அரசு முதற்கட்டமாக ரூ.25 கோடி அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கிய நேரத்தில் தமிழகம் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இதனைத் தடுக்க பாஜக சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏனென்றால் பாஜக அரசுக்குக் கர்நாடகா மீது அதிகம் பாசம். குட்டிக்கரணம் அடித்தாலும், தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். இது ஒருபுறம் இருக்க இதையெல்லாம் தட்டி கேட்கக்கூடிய அதிமுக அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
”மேகதாட்டு அணை கட்டுவதற்கு எதிராக 2014ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது, வழக்கு தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கிறது. நான்கு ஆண்டுகள் முடிந்திருக்கக்கூடிய இந்த வழக்கில் தமிழகத்தில் முதல்வராக இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவரைத்தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோரால் தடை உத்தரவைப் பெற முடிந்திருக்கிறதா? அந்தத் தடை உத்தரவைக் கூட பெறமுடியாத நிலையில் குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகப்பெரிய படுதோல்வி அடைந்திருக்கிறார் என்பது தான் உண்மை” என்று குறிப்பிட்டுள்ளார்.
”முதல்வர் மீதான ஊழல் புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணை நடத்தச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது, அதற்கு உச்ச நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, உழவர்களைப் பாதிக்கக்கூடிய இடைக்கால மனுவினை நட்டாற்றிலே விட்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியுள்ளார்.
இதுவரையில் மத்திய அரசிடம், சென்னை வெள்ளம், ஒகி பாதிப்பு, கஜா பாதிப்பு என மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு இதுவரையில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கியிருக்கும் தொகை வெறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் தான். அப்படியென்றால், இயற்கை பேரிடர் சட்டம் எதற்கு,தேசிய பேரிடர் பாதுகாப்பு பங்களிப்பு எதற்கு, மத்திய அரசு அங்கிருந்து குழுவை அமைத்து ஆய்வு நடத்த ஏன் அவ்வளவு தாமதம், தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏன் மத்திய அரசுக்கு வரியைக் கட்ட வேண்டும் என்று சரமாரியாக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்,”எந்த முகத்தை வைத்துக்கொண்டு தாமரை தமிழகத்தில் மலரும் என்கிறார்கள், தண்ணீர் இல்லாமல் புல்லுக்கே வக்கில்லை. தாமரை மலர்ந்திடுமா என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்துக்கு மேகதாட்டு என்ற புதிய பிரச்சினையை கொண்டுவர வேண்டும் என பாஜக நினைத்திருந்தால், இதிலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற நல்ல முடிவினை எடுக்கவில்லை என்றுதான் அர்த்தம். எனவே பாஜக இனி தமிழகத்துக்கு எந்தச் சூழ்நிலையிலும் வர முடியாத ஒரு சூழலை ஏற்படுத்துவோம்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.
முன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மத்திய அரசு அனுமதி கொடுத்தாலும் மேகதாட்டு அணை கட்ட முடியாது. இது தேர்தலுக்காக நடத்தப்படும் நாடகம். இது நிறுத்தப்பட வேண்டும் என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக் கூட மோடி தயாராக இல்லை. மீண்டும் அவர் பிரதமராவதை தடுப்போம் என்று தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சியில் ஒவ்வொன்றுக்கும் போராட வேண்டியிருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.