அரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம்

அரசியல்வாதிகளின் கூரிய ஆயுதம் இனவாதம் என்பதால், இனவாதத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளின் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர் ஏ. செல்வேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.


சமகால அரசியல் நிலைமையில் இனவாதம் மீண்டும் தலைதூக்குவது குறித்து இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமாக இருந்தால் இலங்கையிலே இனவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களிலே, அவர்கள் தம்வசம் எடுத்துக்கொள்கின்ற, அவர்களது வெற்றிக்குத் துணையாக அமைகின்ற கூரிய, ஆயுதம் இனவாதமாகும்.

எனவே இனவாதத்தைத் துடைத்தெறிந்தால்தான் இலங்கையில் ஒரு சுபீட்சமான நிலையைக் கொண்டு வரலாம்.

தேர்தல் காலங்களிலே எவரும் இனவாதத்தை கையிலெடுக்கக் கூடாது என்று அரசியலமைப்பிலே 20வது திருத்தமாக சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

தேர்தல் காலங்களிலே இனங்களைக் கூறுபோட்டு முரண்பாடுகளைத் தோற்றுவித்து அழிவுகளை உண்டாக்கக்கூடிய எந்த வாசகங்களும் பிரயோகிக்கக் கூடாது என்றும் அதனையும் மீறி அரசியல்வாதிகள் இனவாதத்துடன் செயற்படுவார்களேயானால் அவர்களது பிரதிநிதித்துவம் இல்லாமலாக்கப்படும் என்பதை அரசியலைமப்பு ரீதியாகக் கொண்டுவந்து சட்டமாக்க வேண்டும்“என வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு “நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இனவாதத்தையே தமது முதலீடாக வைத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரகசிய ஒப்பந்தத்தைச் செய்துள்ளது என அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறான இனவாதக் கருத்துக்கள் பேரழிவை ஏற்படுத்தும்“ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 #Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
#selventhiran

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.