விஸ்வாசம்: ரிலீஸில் பிரச்சினை இல்லை!

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் வெளியிட தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதை நீக்கக்கோரி தயாரிப்பாளர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விநியோகஸ்தர் சாய்பாபா விஸ்வாசம் படத்தின் கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளின் விநியோக உரிமையை கைப்பற்றியிருந்தார். இவர் சினிமா பைனான்சியர் உமாபதியிடம் வாங்கியிருந்த கடனில் 78 லட்சம் ரூபாயை திருப்பித் தரவில்லை. எனவே உமாபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சாய்பாபா விநியோக உரிமையைக் கைப்பற்றிய பகுதிகளில் மட்டும் விஸ்வாசம் படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார். இதனால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பாக்கித் தொகையில் 35 லட்சம் ரூபாயை இன்றே வழங்குவதாகவும், மீதம் உள்ள தொகையை 4 வாரத்திற்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளிப்பதாகவும் பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இதை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்திருந்தார்.
அதன்படி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் பிற்பகல் நீதிபதி எம்.சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 35 லட்சம் ரூபாயை உடனடியாக பெற்றுக்கொண்டு மீதித் தொகையை நான்கு வாரங்களில் பெற உமாபதி தரப்பு ஒத்துக்கொண்டது. எனவே இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. எனவே நீதிபதி விஸ்வாசம் படத்திற்கு கோவை, திருப்ப்பூர், ஈரோடு பகுதிகளில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டார். இதனால் அப்படம் ரிலீஸாவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
Powered by Blogger.