அவசரநிலை பிறப்பிக்க நேரிடும்: நீதிபதிகள் எச்சரிக்கை!


சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் போக்கு குறித்து அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதித்துறை நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்ய
வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்ததுசென்னை உயர் நீதிமன்றம். இதையடுத்து, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ஓய்வுபெற்ற பின்பும், அவரைச் சிறப்பு அதிகாரியாக ஓராண்டு காலத்திற்கு நியமித்து உத்தரவிட்டது. அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டது. கடந்த முறை நடந்த வழக்கு விசாரணையின்போது, கிண்டியில் உள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு 50 நாட்களாகியும் தனக்கென்று அலுவலகம் எதுவும் இல்லாமல் நடுத்தெருவில் இருப்பதாகவும் சிறப்பு அதிகாரி புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரை மனுவாகத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, இன்று (ஜனவரி 9) சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என பொன்மாணிக்கவேல் புகார் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த அரசுத் தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர், விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தனக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்தான் (பொன்மாணிக்கவேல்) சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை திருச்சியில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டதாகவும், சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தைப் பூட்டி சாவியைச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரிடம் சிறப்பு அதிகாரி ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 6 ஆண்டுகளாக சென்னை அலுவலகத்தில் தான் பணியாற்றி வந்ததாகவும், ஓய்வு பெற்ற பிறகு தன்னை சந்தித்த ஆய்வாளர் கேட்டுக்கொண்டதால் சாவியை ஒப்படைத்ததாகவும் சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் பதில் கூறினார். அப்போது குறுக்கிட்ட அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், “சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளை, தங்கள் பிரிவுக்குத் திரும்பும்படி சிறப்பு அதிகாரி அறிவுறுத்திருக்கிறார்.அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை” என குறிப்பிட்டார். இதனைக் கேட்ட நீதிபதிகள், ஓய்வு பெற்ற டிஜிபிக்கு உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு, டிஜிபி தற்போது பணி நீட்டிப்பில் இருப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் குறிப்பிட்டார். ஓய்வுபெற்ற ஒருவர் டிஜிபியாக தொடரும் நிலையில் சிறப்பு அதிகாரி ஏன் தொடரக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை மாநில அரசு கையாளும் விதம் முறையாக இல்லை எனவும், தேவைப்பட்டால் இந்த வழக்கில் நீதித்துறை அவசரநிலையைப் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர். இந்த மனுவுக்குப் பதில் அளிக்கும்படி அரசுத் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.