பாடுநிலாவே பாகம் 18

கண்கட்டு பிரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது, கடைசிக்கட்டு பிரிக்கும் போது, “சாதனா, பிரிக்கட்டுமா?” என்ற பகலவனிடம்,
“அண்ணா, காங்கேசன்” மெல்ல இழுத்தாள்.

எங்கோ தொலைவில் நின்ற காங்கேசனின் செவிகளிலும் அந்த வார்த்தை விழவே செய்தது. அவசரமாய் விரைந்து வந்தவன், அவளுக்கு முன்னால் நின்றுகொண்டான்.

மணித்துளிகள் கரைந்தன. இதயம் பாறாங்கல்லை சுமந்திருந்தது அனைவருக்கும். கண் திற்கும் தருணம் நெருங்கியது, கண்களை தட்டிவிழித்தாள் சாதனா. எதுவுமே தெரியவில்லை, ஒரே இருட்டாக இருந்தது. மீண்டும் மீண்டும் கண்களை மூடித் திறந்தாள். மெல்லியதாய் தெரிந்தது காங்கேசனின் உருவம்.
கண்ணைக் கசக்கிவிடப்போனவளை சட்டென்று தடுத்த தாதிப்பெண், “ஆறுதலா பாருங்க” என்றார்.
மீண்டும் விழிகளை மூடித்திறந்தவள், இப்போது நன்றாகப் பார்த்தாள். எதிரில் காங்கேசனின் முழு உருவமும் அவள் கண்முன்னே தெரிந்தது.

ஆனந்தத்தில் அமிழ்ந்துபோனவள், “அது---அது ---தெரியுது—அம்மா ---அம்மா---எனக்கு கண் தெரியுது, காரு எனக்கு கண் தெரியுது” ஆர்ப்பரித்தவளை பாய்ந்து தாவி அணைத்துக்கொண்டான் காங்கேசன். அவளும் ஒரு சிறு பறவையாய் அவன் அணைப்பிற்குள் புகுந்துகொண்டு விம்மி விம்மி அழுதாள்.
அவர்களின் அந்த உலகில் யாருமே அவர்களுக்குத் தெரியவில்லை. எத்தனை வருட காதல், அவனுக்குள் ஆழ்ந்துபோயிருந்த மொத்த நேசமும் உடைப்பெடுத்தது அந்தக்கணத்தில், அவளுக்காய் அழுது, கரைந்து, உருகி, நேசித்து ----அப்பப்பா-- அவளைவிட அதிகமாய் அழுதுகொண்டிருந்தான் காங்கேசன்.

சங்கடமாக இருந்தபோதும் அருகில் வந்த பகலவன்,” காரு, அவ அழக்கூடாது, கண்ணைத்துடை” என்றான்.
சட்டெனச் சுயஉணர்வுபெற்ற காங்கேசன், “சாது, அதுதான் எல்லாம் சரியாச்சே, அழக்கூடாது, அழாதே” என்றான்.
அருகில் வந்த காங்கேசனின் தாயார், “இப்ப எதுக்கு ரெண்டுபேரும் அழுறீங்க,” கண்ணைத் துடைங்க” என்றார் விழிகளில் வழிந்த நீரோடு இருவரையும் அணைத்தபடி.
“அம்மா--- “ இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் சாதனா.
அனைவரும் சாதனாவைச் சுற்றி நின்றனர். மகிழ்வுடன் அனைவரையும் நிமிர்ந்துபார்த்த சாதனா, புன்னையோடு உரையாடிக்கொண்டிருந்தாள்.
அவ்வேளை அங்கே வந்த தாதிப்பெண், “டொக்ரர்,சாதனா கொஞ்சம் ஓய்வா இருக்கிறது நல்லது இல்லையா” என்றார்.

“ஆமாம்----அதைத்தான் நானும் சொல்லநினைச்சன்,” என்ற பகலவன், “எல்லாரும் வீட்டுக்கு கிளம்புங்க, சாதனா ஓய்வெடுக்கட்டும்” என்றதும் “என்னடா அண்ணா, அவ இங்க இருக்கணுமா, சரி அப்ப நானும் கூடவே இருக்கிறன்” என்றான் காங்கேசன்.
“உதைபடுவ, முதல்ல நீ கிளம்பு, அவளையும் அழவைச்சிட்டு” பகலவன் சொல்லிமுடிப்பதற்குள், காங்கேசன் மைத்துனியை பாவமாய் ஒரு பார்வை பார்த்துவைக்க “எதுக்கு இப்பிடி காருமேல பாயிறீங்க?” கேட்டது கானகி.

“அது—ஒண்ணுமில்ல , சாதனாவோட நல்லதுக்காகத்தான்” மௌனமானான் பகலவன்.
அவனை அடக்கும் திறன் கானகிதான் என்பது காங்கேசனுக்கு நன்றாகவே தெரியும்.
பலதையும் சொல்லி கடைசியில் காங்கேசன் மட்டும் நிற்க மற்ற அனைவரும் புறப்பட்டனர்.
அவளோடு ஆயிரம் விடயங்களைப் பேசவேண்டும் என நினைத்தாலும் அவள் ஓய்வெடுக்கவேண்டும் என்பதால் மௌனமாக அமர்ந்திருந்தான். ஏற்றப்பட்ட ஊசிமருந்தின் தாக்கத்தில் அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.

தொடரும்

கோபிகை
ஒளிஅரசி சஞ்சிகை
இணைஆசிரியா்.

No comments

Powered by Blogger.