புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு!


புதுக்கோட்டை தச்சன்குறிச்சியில் வருகிற 14ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சியில் கடந்த 2ஆம் தேதியன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதற்கான வாடிவாசல், தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை போன்றவை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் நடைபெற்றன. 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசாணை பிறப்பிக்காததால் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. அதனால், ஜல்லிக்கட்டு போட்டி தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தச்சன்குறிச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 14ஆம் தேதி தச்சன்குறிச்சியிலும், 18ஆம் தேதி வடமாலாப்பூரிலும், 19ஆம் தேதி கீழ்ப்பனையூரிலும், 20ஆம் தேதி விராலிமலையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம் பொட்டிரெட்டிப்பட்டியில் ஜனவரி 19ஆம் தேதியும், ஜனவரி 24ஆம் தேதியன்று கரியபெருமாள் புதூரிலும், பிப்ரவரி 14ஆம் தேதியன்று அலங்காநத்தத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.