கிழக்கின் புதிய ஆளுநர் விடுத்துள்ள வேண்டுகோள்!

இனங்களுக்கு எதிராக வன்முறைகளை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் மிகவும் அன்போடு கிழக்கு மாகாண சமூகத்தினை வேண்டிக் கொள்கிறேன் என புதிய கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.


 ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக நான் நியமிக்கப்பட்டதன் பின்னர் சில சகோதரர்கள் இனரீதியான முரண்பாடுகளை தோற்றுவித்து இனரீதியாக பார்ப்பதை நான் அவதானிக்கின்றேன்.

இது தொடர்பிலே ஹர்தால் மற்றும் கடையடைப்பு போன்ற விடயங்களுக்கு ஒரு சில சகோதரர்கள் முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் அறிகின்றேன்.

குறிப்பாக கிழக்கு மாகாண மக்கள் நாம் எல்லோரும் சந்தோசப்படவேண்டும் எங்களது மொழியை பேசுகின்ற எங்களோடு சேர்ந்து செயற்படக்கூடிய என்னை நியமித்தமைக்காக நீங்கள் எல்லோரும் பெருமைப்படவேண்டும்.

குறிப்பாக நான் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கோ குறிப்பிட்ட பிரதேசத்திற்கோ அல்லது குறிப்பிட்ட மாவட்டத்திற்கோ அல்ல மொத்த கிழக்கு மாகாணத்திற்குமே ஆகும்.

நான் ஆளுநர் பதவியை பொறுப்பெடுத்த நாள் முதல் கிழக்கு மாகாணத்து அனைத்து மக்களும் என்னுடைய சகோதரர்கள் எனது சகோதரிகள் எனது தாய்மார்கள் தந்தையர்கள் தம்பிமார் தங்கைமார் அண்ணன் தம்பி என்று மிகத்தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்.

ஆகவே கிழக்கு  மாகாணத்தில் வாழுகின்ற அனைத்து மக்களையும் பாதுகாத்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது எனது கடமையாகும்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக எமது நாட்டில் இடம் பெற்றுக் கொண்டிருந்த இனரீதியான போராட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்த நிலையில் மிகவும் நெருக்கமாக வாழ வேண்டிய தமிழ் முஸ்லிம் சமூகத்தினை சில அரசியல் பிற்போக்கு சக்திகளாலும் வெளிநாட்டு டயஸ்போராக்களாலும் தூண்டப்பட்டு மீண்டும் கிழக்கு ஆளுநர் நியமனத்தினைவைத்து குழப்பத்தினை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் ரீதியாக அனுகூலத்தினை அடையும் நிகழ்ச்சி நிரலை நடாத்துவதற்கு முயற்சிக்கின்றனர்.

 உள்ளுர் அரசியல்வாதிகளும் சில வெளிநாட்டு சக்திகளும் இதற்குத் துணைபோவதாக நினைக்கிறேன். கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்ட இரண்டு சமூகங்களாகிய நாங்கள் பொருளாதார ரீதியாகவும் உயிர் இழப்புக்களையும் சந்தித்த சமூகம்.

ஆகவே மிகவும் அன்புடன் கிழக்கு மாகாண மக்களிடத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் நான் உங்களிடம் வேண்டிக் கொள்வது அறிமுகம் இல்லாத முகப்புத்தகங்கள் வலைத்தளங்கள் இணையத்தளங்களில் வெளிவருகின்ற செய்திகளை பகிர்வதிலும் அதனை ஏனைய மக்களுக்கு அச்சுறுத்துவதன் மூலமாகவும் குழப்பத்தினை ஏற்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

எதிர்வரும் காலங்களில் மூவின மக்களையும் சரிசமமாக பார்த்து என்னால் முடிந்த சேவையினை எனது காலப்பகுதியில் செய்வேன் என்பதை உறுதியாக குறிப்பிடுவதுடன் எதிர் வரும் நாட்களில் கடை அடைப்புக்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்தி இனங்களுக்கு எதிராக வன்முறைகளை குழப்பங்களை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும் மிகவும் அன்போடு கிழக்கு மாகாண சமூகத்தினை வேண்டிக் கொள்கிறேன்.

அத்துடன் சகல இனங்களையும் சேர்ந்த சமையத் தலைவர்கள் சமூக நிறுவனங்கள் அரசியல் தலைமைகள் அனைவரும் இவ் விடயங்களில் சுமூகமான நிலைமையினை ஏற்படுத்துவதற்கு உதவி ஒத்தாசைகளை வழங்க வேண்டும் என்பதுடன் இம்மாகாணத்தில் மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு ஏற்றவகையில் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் எனவும் வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.