மாணவர்களால் யாழில் பதற்றம்!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் அமைந்துள்ள நாவற்குழி மகா வித்தியாலயத்தின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அப்பாடசாலையின் மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் இன்று காலை அப்பாடசாலையில் பதற்றம் ஏற்பட்டது.


இதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர்.

இவர்கள் பாடசாலைக்கு வெளியிலும் சமூகச் சீர்கேடான விடயங்களிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் இம்மாணவர்களை ஏற்கனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் குறித்த பாடசாலையில் இருந்து மாற்றமாகியும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையிலும் நடந்துகொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது பாடசாலையின் ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இச் சம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் அதிபர், ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.

இதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து  தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின்  பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பாடசாலை  மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்றுதிரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.