பாடுநிலாவே பாகம் 20

வாரம் இரண்டு ஓடிவிட்டது. காங்கேசன் தனது துறை சார்ந்த பதவி உயர்வின் காரணமாக வெளிநாடு செல்லவேண்டி ஏற்பட்டது. அதற்கான அலுவல்களில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தான்.
அந்தப் பணியும் வேலைவாய்ப்பும் அவனது நீண்டகால கனவாக இருந்தது. இதற்காக தலைநகரில் இருந்த பிரதான அலுவலகத்தில் பயிற்சிக்காகச் சென்றிருந்தான். அத்தனை அவசரத்திலும் அடிக்கடி சாதனாவுக்கு அழைப்பு எடுத்து அவளது உடல்நிலை பற்றி கேட்டுக்கொண்டே இருப்பான். அவனோடு கதைக்கும் கணங்களில் எல்லாமே மறந்துவிடும். அவனது கேலியும் கிண்டல் பேச்சும் அவளது கடந்தகாலங்களை மறக்கடித்து இனிமையைத் தூண்டிவிடும்.

சாதனாவின் கண்பார்வை சரியாகிவிட்டிருந்தது. அவள் மீண்டும் விடுதிக்குத் திரும்பியிருந்தாள். தனது தொழில், சார்ந்த பணிகளை மெல்ல மெல்ல முன்னெடுக்கத் தொடங்கியிருந்தவள், முகநூல் மூலமாக கிடைத்த உறவுகளின் மூலம் தன்னைப்போல பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்களின் துயரங்கள் பற்றி அறிந்துகொண்டாள். மனம் அவளுக்கு பாறாங்கல்லாய் கனத்தது. இப்போதெல்லாம், அவளது தேடல்கள் தாய் மண் நோக்கித்திரும்பியிருந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் பலரைக் கண்டுகொண்ட அவளது மனதில் தனக்கான தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சிந்தனைகள் மறையத் தொடங்கியிருந்தன, ஒரு பக்கம் காங்கேசன் மீதான நேசம் தலைதூக்கினாலும் அவளுக்கென இருக்கும் பாரிய பொறுப்பும் கடமையும் அந்த எண்ணத்தை தூரத்தள்ளிவைக்கச் சொன்னது. மற்றவர்களைப் போல 'எனக்கென்ன' என எணிணி விட்டுவிட அவளால் முடியவில்லை.

எண்ணச்சிறகிற்குள் அகப்பட்டுத் தவித்தவள், எப்படியாவது ஒரு முடிவை எடுத்துவிடவேண்டும் எனத்திடமாக இருந்தாள். தன் முடிவைப்பற்றி தெளிவடைவதற்காய் காங்கேசனைச் சந்திக்க எண்ணியவள், அந்த வாரக்கடைசியில் அவனை வரச்சொன்னாள். அவனும், அவள் வரச்சொன்னதும் வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு
ஊர் திரும்பியிருந்தான்.

" செம்மொழிப்பூங்கா மிகுந்த வனப்புடன் காட்சியளித்தது. அருகருகே அமர்ந்திரந்தனர் காங்கேசனும் சாதனாவும். ஆழமாக அவளைப் பார்த்தபடியே “ என்ன சாது, ஏதோ பேசணும்னு வரச்சொன்னாய்?” என்றான்.

“ம்ம், காரு, நான் ஒரு விசயம் சொன்னா நீ கோபப்படமாட்டியே?” என்றாள்.
“இல்லை, உன் மேல எனக்கு கோபமே வராது, நீ எது சொன்னாலும் அது சரியாத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு, சொல்லு” என்றான்.
“காரு நான் ஊருக்குப்போகலாம்னு நினைக்கிறன்,” என்றவளை நிமிர்ந்து பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டான் காங்கேசன்.
அவனது பார்வையில் தலைதாழ்த்திக்கொண்டவள், அவசரமாய் தன் பக்கத்து எண்ணங்களை விபரிக்கத்தொடங்கினாள்.

கேட்க கேட்க பிரமிப்பாக உணர்ந்தான் காங்கேசன். அவனுக்குத் தெரியும், ஒப்பற்ற மனம் கொண்ட அவளால் சாதாரணமான ஒரு பெண்ணாகச் சிந்திக்கவே முடியாது என்பது.
“எத்தனை எத்தனை பெண்கள், வீட்டிலயும் வாழமுடியாம, சமூகத்தோடயும் சேரமுடியாம அவஸ்தைப்படுறாங்க தெரியுமா, தான், சுமையாகிட்டனே என்ற எண்ணத்தில் தினம் தினம் மனசுக்குள்ளயே செத்துச் செத்து வாழுற அவங்களுக்கு ஒரு பற்றுக்கோடா, படர்கொம்பா நான் வாழணும்னு ஆசைப்படுறன், என் நினைவெல்லாம் அங்க இருக்கிற இயலாதவர்களைச் சுற்றியே ஓடுதுடா, அவங்களுக்கு ஒரு பாதுகாப்பு கொடுக்கிற, அடைக்கலம் கொடுக்கிற இல்லத்தை உருவாக்கணும், அவங்க மேல அன்பு காட்டி அரவணைச்சு தாயா நடக்கணும், இதைவிட என்னோட தனிப்பட்ட சந்தோசங்கள் எனக்கு பெரிசாத் தெரியலைடா” அவள் சொல்லி முடித்ததும் இருதுளி நீர் அவன் கன்னங்களில் உருண்டது.

"பரவாயில்லை, உன் முடிவில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல, தாராளமா ஊருக்குப் போ, நீ சொன்ன எல்லாத்தையும் செய், இதில நானும் இருக்கேனா, இல்லையான்னு சொல்லிட்டுப்போ” என்றான்.
“என்னடா?” ஆச்சரியம் ததும்ப கேட்டவளிடம்,
“சாதனா, இத்தனை வருசமா என் மனசுக்குள் பூட்டிவைச்ச என் நேசத்தை உன்கிட்ட இன்னைக்குத்தான் மனசு விட்டுச்சொல்லப்போறன், இதனால நீ என்னை விட்டு விலகிப்போய்டுவாயோ என்ற ஏக்கத்திலயே சொல்லாம மறைச்சது, இப்ப, நீ போகப்போறாய்தானே என்ற எண்ணத்தில சொல்லிர்றன், எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும், எந்த அளவுக்குன்னு கேட்டா, தெரியாது, ஏன்னா அது---என் காதல் அளவில்லாதது, அதுக்காக என் காதல் சுயநலமானது கிடையாது, என் தேவதையா, நான் ஆராதித்தவளின் உணர்வுகளை மொத்தமா புரிஞ்சுகொண்டது, அதனால தான், இந்த நிமிசம் வரை உனக்காகவே துடிச்சிட்டிருக்கு, உன் விருப்பங்களை இலட்சியங்களை நான் ரொம்பவே மதிக்கிறன், அதுக்கு நானும் துணையா நிக்கிறன்,” என்றவனை ஆதூரமாய் பார்த்தவள்,
“வேண்டாம், என் பாதையை யாரும் நிர்ணயம் செய்யிறதையோ, அதில யாரும் தலையிடுறதையோ நான் விரும்பமாட்டேன், நீ உன் பாதைகளைப் பார், உன் இலட்சியங்களை வெற்றியாக்கு, என் தனிப்பட்ட ஆசைகளும் விருப்பங்களும் என் பாதையை குலைச்சிடும், எனக்காக யோசிக்க ஆரம்பிச்சிடுவன், நான், என்ர குடும்பம் எண்டு மனம் மாறிப்போடும், அது வேண்டாம், நல்ல நட்போட நான் ஊருக்குப் போயிடுறன், நீயும் யூ. எஸ் போ, எனக்குத் தெரியும் என் பார்வைக்கு விலையா நீ எதையும் கேட்கமாட்டாய் என்பது, ” என்றாள்.

அவளது மனப்போக்கை அறிந்துகொண்டவன், “ சரி, என்னைப் புரிஞ்சுகொண்டதற்கு நன்றி, எனக்கு ஒரே ஒரு உண்மையை மட்டும் சொல்லு, என் காதல்---“
அவன் முடிப்பதற்குள்,

“செத்துப்போகலை, ஆனா தோத்துப்போச்சு” என்றுவிட்டு எழுந்து நடந்தாள்.

தொடரும்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.