கேரளா கலவரம்: 1,369 பேர் கைது!

இரண்டு பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்று சாமி தரிசனம் செய்ததையடுத்து, மூன்றாவது நாளாகக் கேரளாவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கைது
கேரளாவில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொச்சியில் 125 பேரும், எர்ணாகுளத்தில் 233 பேரும், ஆலப்புழாவில் 174 பேரும் உள்பட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமையன்று நடந்த போராட்டத்தை அடுத்து, 717 பேர் போலீஸ் விசாரணையில் உள்ளனர்.
தடை உத்தரவு
நகரில் நிலவும் பதட்டமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இன்று 6 மணி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகப் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பால முரளி கூறினார். திருவனந்தபுரம், நெடுமங்காடு, வலியமலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரள முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் இளைஞரணியைச் சேர்ந்த 100க்கும் குறைவானவர்கள் கோஷங்களை எழுப்பிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேவசம் போர்டு உத்தரவு
ஜனவரி 2ஆம் தேதி பிந்து, கனகதுர்கா என்ற இரண்டு பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் வந்து சென்ற பிறகு கோயில் நடை சாத்தப்பட்டது. ஒருமணி நேர பரிகார பூஜைக்கு பின்னர், சன்னிதானம் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கான விளக்கத்தை 15 நாட்களுக்குள் சபரிமலை கோயிலின் தந்திரி தெரிவிக்க வேண்டும் என திருவாங்கூர் தேவசம் போர்டு உத்தரவிட்டுள்ளது.
சசிகலா தரிசனம்
சசிகலா என்ற பக்தை இருமுடி கட்டி, ஐயப்பனைத் தரிசனம் செய்ததை சிசிடிவி காட்சி ஆதாரத்தைக் கொண்டு கேரள போலீசார் உறுதி செய்தனர்.
அவர் பதினெட்டாம் படிகளில் ஏறி சென்றதாகவும், சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சசிகலா தெரிவித்திருந்தார். அவர் சாமி தரிசனம் செய்தாரா, இல்லையா என்பது மிகப்பெரிய குழப்பமாக இருந்தது. இந்நிலையில், சன்னிதானத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரவு 10.45 மணியளவில் சசிகலாவும் அவரது கணவரும் ஐயப்பனைத் தரிசனம் செய்துவிட்டு, கோயிலிருந்து வெளிவரும் காட்சி பதிவாகியிருந்தது. இதிலிருந்து, அவர் இருமுடி கட்டி பதினெட்டாம் படிகளில் ஏறிச் சென்று ஐயப்பனைத் தரிசனம் செய்தது உறுதியாகியுள்ளது.
இலங்கை காரைத்தீவைச் சேர்ந்த சசிகலா, தற்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
தீக்குளிக்க முயற்சி
இரண்டு பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் முன்பாக சக்தி சேனா இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் கோஷங்கள் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பேர் தீக்குளிக்க முயன்றனர்.இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகுபாடு காட்டக் கூடாது
மத்திய அமைச்சரும் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் கூறுகையில், “சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது மட்டுமல்லாமல் அம்மாநில அரசும் ஒத்துழைப்பு நல்கிறது. பெண் குழந்தைகளைப் பெறுவோம், காப்போம் என கோஷம் எழுப்புகிறோம். அப்படியென்றால், பாலினப் பாகுபாடு காட்டக் கூடாது. பெண்கள் விண்வெளிக்கே சென்று வருகின்றனர். அவர்கள் ஏன் கோயிலுக்குள் வரக் கூடாது” என தெரிவித்தார்.
அமெரிக்காவில் எதிர்ப்பு
பெண்கள் சபரிமலை சன்னிதானத்துக்குள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐயப்ப பக்திப் பாடல்களைப் பாடியும், கைகளில் பதாகைகளை ஏந்தியும் அமெரிக்க பக்தர்கள் கோஷமிட்டனர்
தேசிய புலனாய்வு அமைப்பு
சபரிமலையில் ஐம்பது வயதுக்குட்பட்ட பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டது குறித்துத் தேசியப் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தக் கோரி, மத்திய உள் துறை அமைச்சருக்கு கேரள பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான முரளிதரன் கடிதம் எழுதியுள்ளார்.
சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதிக்கலாம் என்றே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால், காவல் துறையினரே பெண்களைஅழைத்து வந்து வழிபடச் செய்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Powered by Blogger.