சிட்னி டெஸ்ட்: சுவாரஸ்யமான சாதனைகள்!

ஆஸ்திரேலிய பந்துவீச்சை அவர்களது மண்ணிலேயே சிதறடித்த இந்திய அணி 622 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. சத்தேஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த் ஆகிய இருவரின் அபார சதமே இந்திய அணியை இந்த அளவுக்கு முன்னிலை பெறவைத்தது. இவர்கள் இருவரது ஆட்டம் இதற்கு முந்தைய பல சாதனைகளையும் தகர்த்துள்ளது.


இன்றைய (ஜனவரி 4) ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 159 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். இதற்கு முன் பரூக் இன்ஜினீயர் அடிலெய்டில் 89 ரன்கள் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. கிரண் மோரே ஆட்டமிழக்காமல் 67 ரன்களும், பார்தீவ் பட்டேல் 62 ரன்களும், எம்எஸ் தோனி ஆட்டமிழக்காமல் 57 ரன்களும் அடித்துள்ளனர்.

மேலும் தோனி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 148 ரன்கள் அடித்ததுதான் வெளிநாட்டு மண்ணில் இந்திய விக்கெட் கீப்பர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன்னாக இருந்தது. தற்போது ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் சேர்த்து முதல் இடம்பிடித்துள்ளார்.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பராக, பிற கண்டங்களில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை ரிஷப் பந்த் வங்க தேச வீரர் முஸ்ஃபிகுர் ரஹீமுடன் இணைந்து பெற்றுள்ளார். முஸ்ஃபிகுர் 2017ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக வெல்லிங்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 159 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

புஜாரா இந்தப் போட்டியில் இரட்டைச் சதத்திற்கு நெருக்கமாக வந்து பறிகொடுத்தாலும் 18வது சதத்தைப் பூர்த்தி செய்துள்ளார். இந்தத் தொடரில் புஜாரா அடித்த மூன்றாவது சதம் இதுவாகும். இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை, ஏற்கனவே 3 சதங்கள் அடித்துள்ள கவாஸ்கருடன் பகிர்ந்துள்ளார். இந்தப் பட்டியலில் 4 சதங்களுடன் கோலி முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரில் அதிக ரன்களை குவித்துள்ள புஜாரா, அதிக பந்துகளையும் எதிர்கொண்டுள்ளார். இந்தத் தொடரில் 7ஆவது இன்னிங்ஸை ஆடியுள்ள புஜாரா, 1135 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 1033 பந்துகளை எதிர்கொண்ட கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இன்னும் 69 பந்துகளை எதிர்கொண்டால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக பந்துகளை எதிர்கொண்ட திராவிட்டின் (1203 பந்துகள்) சாதனையை முறியடிப்பார்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 26 ஓவர்கள் பந்துவீசிய ஸ்டார்க் 123 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார். ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். இதில் எந்த ஓவரும் மெய்டன் ஆகவில்லை.

1979-80ஆம் ஆண்டு ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் என நிர்ணயிக்கப்பட்ட பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஒருவர் மெய்டன் ஆகாமல் இத்தனை ஓவர்கள் பந்து வீசியது இதுவே முதல் முறை. நேற்றைய ஆட்டத்தின் போது ரஹானே விக்கெட்டை ஸ்டார்க் கைப்பற்றியது அவரது 199ஆவது விக்கெட். இன்றைய ஆட்டத்தில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 200 விக்கெட்டுகளை வீழ்த்திய 17ஆவது ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் என்ற பெயர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு இந்திய பேட்ஸ்மேன்கள் இடம் தரவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.