ஜாதகத்தில் நீச பங்க ராஜயோகம்!

ஒவ்வொருவருடைய ஜாதகத்திலும் ஒவ்வொரு விதமான கிரக அமைப்புக்கள். மூலம், பார்வை,
சேர்க்கை, ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம். பஞ்ச மகாபுருஷ யோகம், பலவகையான ராஜ யோகங்கள் உள்ளன. இந்த வகையான யோகங்கள் சுபயோகம், சுப கத்திரி யோகம், பாப கத்திரி யோகம் என பல பிரிவுகள் இருக்கின்றன. இதில் இந்த நீசபங்க ராஜயோகம் என்பது மிகவும் பிரபலமான யோகமாகும். இது அனுபவபூர்வமாகவும் மிகச்சரியாக பலன் தருகிறது. இதை கிராமப் புறங்களில் உள்ள பெரியவர்கள் பேசும்போது அவருக்கு நீச திசை அதுதான் பல வகைகளில் பெரிய யோகத்தை செய்து விட்டது என்று சொல்வார்கள். அந்தளவிற்கு இந்த யோகம் மிகப் பிரசித்தமான ஒன்று. நீசம் என்பது மிகவும் தாழ்ந்த நிலையை குறிக்கும். கிரகத்தின் வலிமை குன்றிய அமைப்பு, எந்த கிரகம் நீசமோ அந்தக் கிரகத்தின் தன்மைகள், காரகத்துவங்கள் எல்லாம் நீர்த்துப் போய்விடும்.

அந்தக் காலத்தில் ஒருவரை மிகவும் கடும் சொற்களால் ஏசும்போது அவன் நீசன், நல்ல எண்ணம், நல்ல புத்தி இல்லாதவன். நீசத் தொழில், நீச சேர்க்கை உடையவன் என்று சொல்வார்கள். அது இந்த கிரக நீசத்தன்மையை வைத்து சொல்லப்பட்டது. எல்லா கிரகங்களும் ஒவ்வொரு வீட்டில் நீசம் அடையும். நீசம் பெற்ற கிரகம் நீச தன்மையிலேயே இருந்தால் அந்த கிரகத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் ஒரு 20 சதவிகிதம்கூட கிடைக்காது.

அதேநேரத்தில் அந்தக் கிரகத்திற்கு நீச பங்கம் ஏற்பட்டு இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை கொடுத்துவிடும். சூரியன் துலா ராசியில் நீசம் அடையும். அதாவது ஐப்பசி மாதம் பிறந்தவர்களுக்கு சூரியன் நீசமாக இருப்பார். சந்திரன் விருச்சிக ராசியில் நீசம். குரு மகர ராசியில் நீசம். புதன் மீன ராசியில் நீசம். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம். சனி மேஷ ராசியில் நீசம். செவ்வாய் கடக ராசியில் நீசம்.

நீச கிரகம் எப்போது ராஜயோகம் கொடுக்கும்?
நீசன் நின்ற ராசிக்குடையவன் ஆட்சி, உச்சம் பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் பரிவர்த்தனையில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச்ச கிரகம் வர்க்கோத்தமம் அடைந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகத்தை இன்னொரு நீச்ச கிரகம் பார்ப்பது நீசபங்க ராஜயோகம். நீச கிரகம் நவாம்ச சக்கரத்தில் உச்சம், ஆட்சி பெற்றால் நீசபங்க ராஜயோகம்.
நீச கிரகம் வக்கிரமாக இருந்தால் நீச பங்க ராஜயோகம்.
சாஸ்திரம் காட்டும் வழி  ஜோதிட பரிபாடல் விளக்கம்

ஆதிரை பரணி கார்த்திகை
ஆயில்யம் மூப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ்சோதி
சித்திரை மகமீராறும்
மாதங் கொண்டார் தாரார்
வழிநடைப் பட்டார் மீளார்
பாய் தனிற் படுத்தார் தேறார்
பாம்பின் வாய்த் தேரை தானே!

பரணி, கிருத்திகை, திருவாதிரை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, சுவாதி, விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி. இந்த 12 நட்சத்திரங்களில் சில விஷயங்களை செய்யக்கூடாது என ஜோதிடப் பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது. குறிப்பாக இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் பணம் கடன் கொடுத்தல், கொடுக்கல், வாங்கல் செய்வது கூடாது. கடன் கொடுத்தால் வசூல் செய்வதில் சிரமங்கள், சிக்கல்கள், வழக்குகள் ஏற்படும். கடன் பெற்றவருக்கு திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு எதிர்மறை பலன்கள் உண்டாகும். அதேபோல் நகைகளையும் இரவில் கொடுக்க கூடாது. வீட்டு பத்திரம், நகைகளை அடைவுகள் வைக்கக் கூடாது. நீண்டதூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. காரணம் பயணத்தில் தடைகள் உண்டாகும்.பொருட்கள் தொலைந்து போக வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் திரும்ப முடியாத சூழ்நிலைகள் வரும். பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகும். மேலும் மருத்துவரை முதன் முதலாக சென்று சந்திக்கக் கூடாது. மருத்துவமனையில் சாதாரண சிகிச்சைக்காகவோ, அறுவை சிகிச்சைக்காகவோ சென்று சேரக் கூடாது என இந்த ஜோதிட பரிபாடல் மூலம் நாம் அறிய முடிகிறது.

இப்படிப்பட்ட யோக அமைப்புக்கள் நம் ஜாதகத்தில் இருந்தால் நாமும் ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கையில் உச்ச நிலையை அடைய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும்.

No comments

Powered by Blogger.