பொங்கல் பரிசு வழங்குவதில் முறைகேடு: தினகரன்


பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் தினகரன் வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியது. இந்த நிலையில் பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டுமெனவும் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்று (ஜனவரி 12) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய அரிசி மற்றும் சர்க்கரையில் மிகப்பெரும்பாலான இடங்களில் 50 கிராம் முதல் 80 கிராம் வரை குறைவாகவே வழங்கப்படுவதாக புகார் எழுந்திருக்கிறது. இது உண்மையானால், சுமார் 250 மெட்ரிக் டன் அரிசி மற்றும் சர்க்கரையைச் சில தனிநபர்கள் கைப்பற்றி வெளிமார்க்கெட்டில் விற்றிருக்க வாய்ப்பு உள்ளது” என்று குற்றம்சாட்டியுள்ளார். “முந்திரி, உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டின் அடக்கவிலை இன்றைய மார்க்கெட் மதிப்பீட்டின் அடிப்படையில் 24 ரூபாய்க்குள்தான் இருக்க வேண்டும் என்ற யதார்த்தத்தை மீறி, 30 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஒரு பாக்கெட்டுக்குக் கூடுதலாகத் தரப்படும் தலா 6 ரூபாய் யாருக்குப் போகிறது? இது உண்மையானால் சுமார் 11.7 கோடி ரூபாயை யார் சுரண்டியது?” என்று கேள்வி எழுப்பியுள்ள தினகரன், முழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.