விஜய் 63: படக்குழுவில் இணைந்த மற்றொரு நாயகன்!


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் கதிர் இணைந்துள்ளார். அட்லீ - விஜய் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலை இயக்குநர் முத்துராஜ் தலைமையில் சென்னையில் அரங்கு அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படக்குழு அமெரிக்கா சென்று படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்து வந்தது. நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தைத் தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. சிறந்த திரைக்கதைகளைத் தேர்வு செய்து நடித்துவரும் கதிர், கடந்த ஆண்டு பரியேறும் பெருமாள் எனும் வெற்றிப்படத்தைக் கொடுத்தார். கதாநாயகனாக வலம் வந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கவும் இவர் தயக்கம் காட்டுவதில்லை. விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த விக்ரம் வேதா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விவேக், யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளைக் கவனிக்கிறார். ஜனவரி 20ஆம் தேதி இதன் பூஜை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து 21ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தீபாவளியை முன்னிட்டு படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
Powered by Blogger.