இளைய நிலா: இன்றைய ‘எந்திரன்’களுக்கு ஒரு வார்த்தை…!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி - 3

ஆசிஃபா
நண்பர் ஒருவருக்குப் புகைப்படம் எடுப்பதில் அவ்வளவு ஆர்வம். எப்படியேனும் ஒரு புகைப்படக் கலைஞனாக வேண்டும் என்று கனவு. ஆனால், வீட்டில் கல்வி முக்கியம், வேலை முக்கியம் என்று பொறியியல் படிக்க வைத்து, ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். வாழ்க்கையில் என்ன செய்யப் போகிறோம் என்ற மிகப் பெரிய கேள்வியை நாளும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இன்னொரு தோழிக்குப் பாடகி ஆக வேண்டும் என்ற கனவு. ஆனால், சம்பந்தமே இல்லாமல் கேட் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கிறாள்.
இன்னொருத்திக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற ஆசை, ஆனால் மருத்துவம் படிக்கிறாள்.
இப்படி நம்மைச் சுற்றிப் பலர் இருப்பதைக் காண முடியும். ஏன் நாமேகூட அப்படியான ஒரு நபராக இருக்கலாம். கனவுக்கும் நிஜத்துக்கும் இடையிலான தூரம் அதிகமாக்கப்பட்டுள்ளது. நம் பெற்றோர் தலைமுறையினர் இச்சிக்கலை எளிதாகக் கடந்துவிட்டனர். காரணம், அவர்களுக்கு முறைசார் கல்வி (conventional education) மிகப் பெரிய விஷயம். அந்தக் கல்வியே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்தக் கல்வியே வேலைவாய்ப்பைப் பெற்றுத் தந்தது. அந்தக் கல்வியே வாழ்வின் அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்றது. அந்தக் கல்வியை மிகுந்த போராட்டத்துக்கும் சிக்கலுக்கும் பிறகு அவர்கள் பெற்றனர்.
இன்று பெரும்பாலானோருக்கு அந்தக் கல்வி மிக எளிமையாகக் கிடைக்கிறது. ஆனால், அந்தக் கல்வியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. கல்வி மனிதர்களை உருவாக்கிய காலம் போக, இப்போது எந்திரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட வேலையைச் செய்யும் எந்திரங்கள். அதைத் தாண்டி சிந்திக்கவும் செயல்படவும் நினைப்பவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
யுவல் நோவா ஹராரி, தற்போது உலகின் மிகவும் பிரபலமான வரலாற்றாசிரியர். இவரது மூன்று புத்தகங்கள் மிக மிக விரிவாக வரலாற்றைப் பற்றியும், நிகழ்காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் பேசுகின்றன. “இன்னும் 30-50 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியவில்லை. வளர்ந்துவரும் Artificial Intelligence அனைத்துத் துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் காலம் வரப்போகிறது. அப்படியிருக்க, எந்த மாதிரி கல்வியை வழங்க வேண்டும், எந்த வேலைக்கு நம் குழந்தைகளைத் தயார் செய்ய வேண்டும் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்தக் குழப்பம் இன்றே எழ ஆரம்பித்துவிட்டது. படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோர், என்ன வேலை கிடைக்கும் என்பதை யோசித்து, என்ன படிக்கலாம் என்று குழப்பத்தில் இருப்பவர்கள். குறிப்பாக, தொடர்ந்து சில ஆண்டுகளாக அரசு வேலைக்காகத் தேர்வுக்குத் தயாராகிவருபவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாகத் தோன்றும் எனக்கு. “என்னப்பா பண்ற?” என்ற கேள்வியே பலரைப் பதற்றத்தில் ஆழ்த்துகிறது.
ஏறத்தாழ பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளிக் கல்வி, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை கல்லூரி என்று ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் சில மாதங்கள் அல்லது ஓராண்டு சும்மா இருப்பதை யாரும் விரும்புவதில்லை. ஆனால், அந்த ஒரு சின்ன பிரேக் அவசியம் என்று நான் நினைக்கிறேன். நாம் யார், நம் விருப்பம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளச் சிறு இடைவெளிகூட யாருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைத்தாலும், அது பெரும் தவறாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான முக்கியமான காரணங்களாக இவற்றை முன்வைக்கலாம்:
Ø நல்ல பள்ளி / கல்லூரிப் படிப்பு, அரசு வேலைதான் மரியாதை என்பது பொதுக் கருத்தாக நிலவிவருகிறது. அதை உடைக்கச் சில காலம் தேவைப்படும்.
Ø Passionதான் நம் செயல்களின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பது இந்தத் தலைமுறையின் வாதம்; நல்ல சம்பளம்தான் நல்ல வாழ்க்கைக்கு அடித்தளம் என்பது முந்தைய தலைமுறையின் சிந்தனை.
Ø "Well-Settled Life” என்ற ஒன்று இக்காலத்தில் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், நம்மைச் சுற்றி இந்த வாழ்க்கை மட்டுமே சிறந்தது என்ற கருத்து நிலவுகிறது.
Ø இறுதியாக, நாம் வாழும் காலம் என்பது ஒரு மிகப் பெரிய குழப்பமான காலம். தொழில்நுட்ப வளர்ச்சி, நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவு மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. அதைப் புரிந்துகொள்வதற்கும், அதற்கு ஏற்றவாறு நம்மை re-invent செய்துகொள்வதற்கும் நம் கல்வி நம்மைத் தயார் செய்யவில்லை.
இதில் நம்மால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு மிகப் பெரிய இடைவெளி நம் தலைமுறைகளுக்கு இடையில் விழுந்திருக்கிறது. அதைக் குறைக்கக் கொஞ்சம் பேச்சும், நிறைய விழிப்புணர்வும் அவசியமாகிறது. நாம் வாழும் காலம் என்பது அவர்கள் வாழ்ந்த காலத்துக்கு நேர் எதிரானது. இதையே பலர் புரிந்துகொள்ளவில்லை. அதனால்தான் பல வீடுகளில் சிக்கல்.
பல வேலைகளைச் செய்ய ரோபோட்களை மேலைநாடுகளில் கண்டுபிடித்துவிட்டனர். சில வேலைகளைச் செய்ய ‘எந்திரன்’களை நம் கல்வி முறை தயாரிக்கிறது.
என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவரிடம் இது பற்றி விவாதித்தபோது அவர் சொன்ன பதில் இதுதான்:
“வாழ்க்கையை அதன் போக்கில் வாழக் கற்றுக்கொள். இன்னும் ஐந்தாண்டுகளில் நம் வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்த்திராத மாற்றங்கள் நிகழத்தான் போகிறது. நமக்கு எது பிடித்திருக்கிறதோ, எதில் நம்மால் முழு மனதுடன் ஈடுபட முடிகிறதோ, எச்செயலைச் செய்யும்போது உலகம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே மறக்கிறோமோ, அதைச் செய். அது கல்வியாகட்டும், வேலையாகட்டும், எந்த ஒரு செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.”
இதன் பிறகு நான் என்ன கேட்க முடியும்?
(தொடரின் அடுத்த பகுதி வரும் செவ்வாயன்று...)

No comments

Powered by Blogger.