பாடுநிலாவே .......இறுதிப்பகுதி

ஒரு நாள் சாதனாவை அழைத்த அருட்சகோதரி மார்க்கிரட், ஒருதொகைப்பணத்தை அவளிடம் கொடுத்து, “ இந்தாம்மா, இது வெளிநாட்டில இருக்கிற, ஒருத்தர் இந்த பெண்களுக்காக தந்த பணம். காணி வாங்கிவிட்டாய், மேலதிகமா அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னா இந்த பணத்தைப் பயன்படுத்திக்கொள்” என்றார்.


கண்கள் குளமானது சாதனாவிற்கு. அவளது இலட்சியம் இவ்வளவு விரைவில் வெற்றியாகும் என்று அவள் எண்ணியதே இல்லை. ‘பல லட்சங்கள் தொகையாக இருந்த பணத்தை தந்தவர் யார்?’, எண்ணம் ஓடியதும்,
“சிஸ்ரர், இவ்வளவு பணத்தை தந்து உதவினது யார்?” என்றாள் வியப்போடு.

“அவனோட பெயர் உதய், தான் மட்டும் இல்லாம, தன்னோட நண்பர்களோடையும் கதைச்சு இந்தப்பணத்தை சேகரிச்சு தந்திருக்கிறான், ரொம்ப நல்ல பையன்” என்றார்.

அவனுக்கு நன்றி சொல்லநினைத்த சாதனா, அவனுடைய அலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு சென்றாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேலைகளை விரைவாக முடித்துக்கொண்டு, அந்த எண்களுடன் தொடர்புகொள்ள முயன்றாள். ஏனோ, அழைப்பு இணைக்கப்படவில்லை. இரண்டு, மூன்று தரம் எடுத்துப்பார்த்துவிட்டு நன்றி கூறி குறுந்தகவல் ஒன்றை அனுப்பவிட்டாள். அதற்கு பதில் அனுப்பியிருந்தான். மன்னிப்போடு நன்றியும் சேர்த்து.
அதன் பின்னர், அடிக்கடி அவனது பணஉதவி “உங்களுக்காகவிற்கு” கிடைத்துக்கொண்டிருந்தது
பலரோடு கூடி ஆலோசித்து அவளது இல்லத்தில் இருந்த சிலருக்கு திருமணம் செய்துவிட நினைத்தாள். தியாக சிந்தையுள்ள ஆண்களைத் தேடி, பலர் மூலமாய் தொடர்புகொண்டு அங்குள்ள பெண்களின் நிலவரங்களைக்கூறி ஒன்பது பெண்களுக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

உதய் தந்த பணத்தில் திருமணச்செலவுகளையும், அவர்களுக்கான ஓரிரு தங்க ஆபரணங்களையும் வாங்கிக்கொண்டாள். அருகிலிருந்த இரண்டு காணிகளின் உரிமையாளர்களிடம் சில காலத்திற்குத் தந்துதவுமாறு கேட்டுவாங்கி அவர்களுக்கான தங்குமிடத்தினையும் ஏற்பாடு செய்தவள் திருமணத்திற்கான திகதியையும் குறித்துக்கொண்டாள். திருமணத்திற்கு ஒருவாரமே இருந்தது. அவளது அனைத்து வேலைகளையும் பார்த்து பெருமிதம் அடைந்த அருட்சகோதரி மார்க்கிரட்,
“சாதனா, அந்த உதய், இங்க வந்திருக்கானாம், ரெண்டு மாசம் தொழில் இங்கதானாம், அவனையும் கல்யாணத்திற்கு கூப்பிடலாமா?” என்றார்.
“நிச்சயமா, சிஸ்ரர், எவ்வளவு உதவி செய்திருக்கிறார், கூப்பிடலாம்” என்றாள்.

அவள் சொல்லிவிட்ட மறுநாள், புதிய அலைபேசி எண்ணிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது. அவள் சத்திரசிகிச்சையில் நின்றதால், வந்ததும் எடுத்துப்பார்த்தவள், தானே அந்த இலக்கத்திற்கு அழைத்தாள்.
“ஹலோ” கம்பீரமாய் வந்தது ஒரு ஆண்குரல். சட்டென் ஒருகணம் தயங்கிய அவள், உடனேயே சுதாகரித்து, “இந்த எண்ணிலிருந்த அழைப்பு வந்திருந்தது” என்றாள்.

“ஓ—நீங்க சாதனாவா?”
“ஆமாம், நீங்கள்?”
“உதய்” அவசரமாய் வந்தது அவனது பதில்.
ஓ---மன்னிக்கவும், நான் சத்திர ----“
அவள் சொல்லிமுடிப்பதற்குள், “பரவாயில்லை, எனக்குத்தெரியும், விடுங்க” என்றவன்,
“நான் உங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும், உங்களைப்பத்தி எனக்கு மார்க்கிரட் சிஸ்ரர் சொன்னாங்க, என்னைப்பத்தியும் சொன்னதா சொன்னாங்க, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு, என்னோட வாழ்க்கைத்துணையா வருவீங்களா?”
அவனது கேள்வியில் ஒருகணம் உறைந்துபோனவள்,
“ஹலோ---ஹலோ சாதனா” என்ற அவனது அடுத்தடுத்த அழைப்பில்தான் நடப்பிற்கு வந்தாள். சட்டென்று எட்டிப்பார்த்த கோபம் வந்தவேகத்தில் மறைந்துகொண்டது அவளுக்கு. என்ன இருந்தாலும் உதய் அதிக உதவிகள் செய்திருப்பவர், என்ற எண்ணம் அவளை மௌனமாக்கியது.

தொண்டையைச் செருமிக்கொண்டவள், “உதய், என் வாழ்க்கை பற்றி சிஸ்ரர் சொல்லியிருப்பாங்க, சமீப காலமாதான் கண்பார்வை கிடைச்சிருக்கு, அது என் நண்பனோட முழு உதவியாலதான் கிடைச்சது,”
“நண்பனா? யாரது?”

“அவனோட பெயர் காங்கேசன், காரு. அவனைப்போல உலகத்தில ஒருசிலர் தான் இருக்கமுடியும், அன்பு, பாசம், கருணை, இரக்கம், நட்பு, காதல் எல்லாத்துக்குமே மொத்த உருவம் அவன், என் மேல உயிரா இருந்தான், அவன் மட்டுமில்ல. அவனோட வீட்டில எல்லாருமே ரொம்ப நல்லவங்க, அந்த குடும்பம் மொத்தமுமே அன்பால நிறைஞ்சது, நான் காருவுக்கு மனைவியாகணும்னு ஆசைப்பட்ட அவங்கட ஆசையையோ, நான்தான் தனக்கு மனைவியா வரணும்னு நேசத்தை வைச்சிருந்த காருவோட காதலையோ நான் ஏற்கவில்லை, காரணம் என்னுடைய இந்த இலட்சியம் தான், இது என்னுடைய சின்ன வயசு முதலான கனவு, எனக்கும் அவனைப் பிடிச்சிருந்தது. காருவை மாதிரி யாராலையும் என்னைப் புரிஞ்சுகொள்ளமுடியாது, அவன் ஆயிரத்தில ஒருத்தன் என்றுதான் சொல்லணும், எனக்கு என் பாதைதான் முதல், இந்த வேலையை சரியா முடிக்கிறது முக்கியம்,
ஒருவேளை கல்யாணம் செய்ய நினைச்சா காருதான் என் மனசில இருக்கிறான், ஆனா ஒருவேளை அவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கலாம், என் காதல் அப்பிடியேதான் இருக்கு, அப்பிடியே தான் இருக்கும், தயவுசெய்து இனி இந்த விசயத்தைப்பத்தி பேசவேண்டாம்” என்றாள்.
மறுமுனையில் அதீத மௌனம்.
சற்றுநேரத்தில் “வைக்கிறேன்” எனக்கூறி அலைபேசியைத் துண்டித்தாள்.
திருமணத்திற்கு முதல் நாள், வைத்தியசாலைக்கு வந்த அருட்சகோதரி மார்க்கிரட், “மாலையில் உதய் உன்னைப் பார்க்க அங்க வருவான், அவனோட பேசு, அவன் ரொம்ப நல்லவன், உனக்கும் ஒரு வாழ்க்கைவேணும்” என்றார் தலையை பரிவுடன் தடவியபடியே. மறுத்து எதுவும் கூறமுடியாது அமைதி காத்தாள் சாதனா. அவனைப்பற்றியே கதைத்துவிட்டு அவர் சென்றுவிட்டார். அவளுக்கு கோபம்கோபமாய் வந்தது.

“அவ்வளவு சொல்லியும் கேட்காமல் --- சிஸ்ரரிடம் சொல்லியிருக்கிறானே என எரிச்சல்பட்டாள். சாப்பிடாமலே அமர்ந்திருந்தவள் மாலையில் அவசரமாக வைத்தியசாலையில் இருந்து வந்திறங்கினாள். வெளியே மகிழூந்து நிற்பதை அவதானித்தவள், யாராக இருக்கும் என எண்ணியபடியே, வாசலில் செருப்பைக்கழற்றவும் அந்தக் குரல் செவிகளில் விழவும் சரியாக இருந்தது.
ஓடிவந்த, அவளைவிட இரண்டுவயது குறைந்த மாற்றுத்திறனாளியான இனியவள், “ “அக்கா, உதய் அண்ணா வந்திருக்கிறார்” என்றாள்.
ஏனோ உதய்யை சந்திக்க அவளுக்கு விருப்பம் இருக்கவில்லை.திரும்பிச்’ சென்றுவிட எண்ணியவள், உடனேயே அது அவனை அவமதிப்பது போல ஆகிவிடும் என எண்ணிவிட்டு, இன்னும் உரக்கச் சொல்லவேண்டும் போல என்றெண்ணி உள்ளே விரைந்தாள்.

அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தவனின் தோற்றம் அவளை சற்று யோசிக்கச்செய்தது.
இது----
அருகில் அரவம் உணர்ந்து திரும்பிய உதய்யைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் சாதனா.
உள்ளம் வெடித்தது, உதடுகள் துடித்தன, அவளது கோலம் கண்டதும் அவனோடு பேசிக்கொண்டிருந்த இருவரும் மெல்ல எழுந்து உள்ளே சென்றுவிட்டனர்.
சிறு குழந்தையாய் கேவலொன்று வெளிப்பட்டது சாதனாவிடம் இருந்து. உணர்வுகள் அருவியாய் உடைப்பெடுத்தது அவளுக்கு. அவனுக்கு மட்டும் என்ன, அவனும் அதே மனநிலையில் தான் இருந்தான்.
பெரிய மூச்சுக்கள் சிரமமாய் வெளிவந்தன சாதனாவிற்கு, கால்கள் சற்றே தடுமாற விழுந்துவிடப்போனவளை அவசரமாய் எழுந்து வந்து தாங்கிக்கொண்டான் உதய காங்கேசன்.
அவனது கைகளிற்குள் சிறைப்பட்டவள், குழந்தையென குலுங்கி குலுங்கி அழுதாள். அவளது தலையை அன்பாக வருடியவன்,
“சாது, என்னடா இது, சரி சரி, அழாதைடா, ரெண்டு வருசம் ஓடிப்போச்சு பாத்தியா, இந்த இடைவெளி என் மேல பாசத்தை தந்ததுதானே, கல்யாணம் பண்ணினா அது காருவைத்தான்னு சொன்னாய்,”
“டேய், ஏன்டா இப்பிடிச் செய்தாய்?
ஏப்பிடி?
“உதய் என்றுதான்”
“அது அம்மாவோட யோசனை, ஏன் என் பேர் உதய காங்கேசன் என்றதை மறந்திட்டியா?”
“இன்னும் கல்யாணம் பண்ணனும் என்ற எண்ணம் இல்லையா உனக்கு,?” என்றான்.
“இங்க என்னைவிட வயசில மூத்தவங்க, நிறையப்பேர் இருக்கும் போது, நான் மட்டும் எப்பிடி?”
“உன்னோட சங்கடம் புரியுது கண்ணம்மா, அதுக்காக இப்பிடியே வாழ்ந்திடுறதா, சரி, எனக்கு இப்ப மனசு நிறைவா இருக்கு, உன் மனசில நான் இருக்கிறேன் என்ற அந்த உண்மையே எனக்குப் போதும், இதுதான் உன் முடிவுன்னா நானும் அதுக்குச் சம்மதிக்கிறேன்” என்ற காங்கேசனை ஆழமாய் பார்த்தவள்
“ நீ என்ன பிறவிடா” என்றாள்.
“மனுசப்பிறவிதான்” “ஏன்?” என்றவனை கண்வெட்டாமல் பார்த்தாள்.
அன்பு ததும்ப அவளைப் பார்த்த காங்கேசன், “சரி சரி, போய் உன் அக்கா, தங்கைச்சிமாரை பார்த்திட்டு வா, உன்னுடைய முடிவு நல்லதா இருக்கும் என்ற நம்பிக்கையில எங்க வீட்டுக்காரர் கல்யாண ஏற்பாடுகளைச் செய்திட்டாங்க, சொல்லிவிட்டால் சரி, இந்த ஒன்பது பேரோட பத்தாவதா எங்கட கல்யாணத்தையும் நடத்தலாம்னு நினைச்சோம், அப்பா அம்மா எல்லாரும் சிஸ்ரர் விடுதியிலதான் தங்கியிருக்கிறாங்க, உன்னை மணப்பொண்ணாதான் பார்ப்பேன் என்றது அம்மாவோட விருப்பம் என்றுவிட்டு, உன்னோட விருப்பம் தான் என்னோட விருப்பம்”; என்றான்.
அவசரமாய் உள்ளே விரைந்தவள், சற்று நேரத்தில் திரும்பி வந்தாள். அவ்வேளை அங்கே வந்தார் இயலிசை அக்கா, அவர்தான் அங்குள்ள அனைவரிலும் வயது அதிகமானவர். கண்கள் இரண்டிலும் பார்வையை இழந்தவர்.

“சாதனா,” என்ற அவரது அழைப்பில் அவசரமாய் அருகில் சென்றாள் சாதனா.
“சாதனா, நீங்கள் ரெண்டுபேரும் கதைச்சது என்ர காதிலையும் விழுந்தது, எங்களுக்காக உன்ர வாழ்க்கையை இழக்கப்போறியா, எங்களுக்குத்தான் தான் கல்யாணம் செய்து குழந்தைகள் வளர்க்கிற பாக்கியம் இல்லை, உன் குழந்தைகளையாவது தூக்கி வளர்க்க ஆசைப்படுறம், எங்களுக்காக பார்த்துப்பாத்து எல்லாம் செய்யிற நீ இதையும் செய்து தா, அதுதான் எங்கட விருப்பம்” என்றார் வலியுடன்.

உடனே, மற்ற அனைவரும் அங்கு வந்துவிட எல்லோரினது வேண்டுகோளும் இதுவாகவே இருந்தது.

“அக்கா ---“ ஓடிச்சென்று அவரைக்கட்டிக்கொண்ட சாதனாவை எல்லோரும் சூழ்ந்துகொண்டனர்.
அனைவரினதும் விருப்பிற்காக மட்டுமன்றி காங்கேசனின் நேசத்திற்காகவும் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டாள் சாதனா.
அவள் சம்மதித்ததும் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட, அவளது கரங்களை இறுகப்பற்றிக்கொண்ட காங்கேசன்,
“நன்றி” என்றான்.
“எதுக்கு?”
“அவங்க எல்லாரும் சொன்னதும் கல்யாணம் பண்ணச் சம்மதம் சொல்லிவிட்;டாயே , அதுக்குத்தான்” என்றான்.
“அவங்க சொன்னதுக்காக மட்டும் சம்மதிக்கல, எனக்கு உன்னை கல்யாணம் பண்ண சம்மதம், அதனாலதான்” என்றாள்.
“உண்மையாவா?”
“ம்”
“நான் எவ்வளவு சந்தோசமா இருக்கேன் தெரியுமா?”
“எவ்வளவு?”
“உலகத்தோட உச்சியில இருக்கிற சந்தோசம்” என்றான்.
கலகலவெனச் சிரித்தாள் சாதனா. அங்கே பொற்காசுகள் சிதறியது போல ஆர்ப்பரித்தான் உதயகாங்கேசன்.
முற்றும்.

கோபிகை.

 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colomboNo comments

Powered by Blogger.