ஐந்து நூற்றாண்டுகளின் (1508 - 2019 )பின்னர் ரத்மலானை நந்தீஸ்வர ஆலயச்சூழலில் தமிழோடு இசை

சரியாக ஐந்து நூற்றாண்டுகளின் (1508 - 2019 )பின்னர் ரத்மலானை நந்தீஸ்வர ஆலயச்சூழலில் தமிழோடு இசைப்பாடலை தொடர்ச்சியாக ஒலிக்கச்செய்வதற்கு முன்வந்து அதனை ஆரம்பித்திருக்கிறார்கள் மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்.


1518 ஆம் ஆண்டு தை மாதத்தில் போர்த்துக்கேயர்களால் இடித்தழிக்கப்பட்டு  சரியாக ஐநூறு வருடங்கள் கழிந்து முறையான பூசைவழிபாடுகளை தொடர்ச்சியாக நிகழ்த்தச்செய்கிற வழிவகையை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள்  முறையான அனுமதியோடு பொங்கல் தினத்தன்று நிகழ்த்திக்காட்டியிருக்கிறார்கள்.

இதற்காக முன்னின்று ஒருங்கமைத்து இதனை சாத்தியமாக்கிய நண்பர்  இரோஷன் , தம்பி ஜர்சிகனுக்கு மிக்க நன்றிகள்.

ஆலயத்தின் வரலாறுகளை தேடுவதில் ஆரம்பத்தில் இருந்து இப்போதுவரையில் உதவிய , உதவிக்கொண்டிருக்கிற நண்பர் ரஜீபன் , நண்பர் பாலகுமாரனுக்கும் நன்றிகள்.

வரலாற்றில் ஒரு புதிரான ஆறாம் பராக்கிரமபாகு  தமிழில் தேவாரங்கள் பாடி வழிபாடுகளை நிகழ்த்த அனுமதித்ததோடு நந்தீஸ்வரத்திருக்கோயிலிற்கு பல நிவந்தங்களையும் வழங்கியிருந்தான் என்பதற்கு சலலிஹினி சந்தேசய போன்ற சிங்கள இலக்கியச்சான்றுகளும் உள்ளன.

இவனது ஆட்சியின் கீழ் தேவாரப்பெருமாள் எனப்பட்டவர்கள் இதற்கு பொறுப்பானவர்களாக இருந்தனர். புறச்சூழல் மாற்றங்களால் தமிழ் மறந்து போன தேவாரப்பெருமாள்கள் இன்றும் தங்கள் பெயர்களோடு தெவரப்பெரும என்கிற வாசகமவோடு இப்போது இருக்கிறார்கள்.

தேவாரப்பெருமாள்கள் மறந்தாலும் நாங்கள் விடப்போவதில்லை என்று இந்த இளைஞர்கள் முன்வந்திருக்கிறார்கள். இந்த தைப்பொங்கல் தினத்தன்று பொங்கல் விழாவை நிகழ்த்தி தங்கள் பணியை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளும் மொறட்டுவ பல்லகலைக்கழக சைவத்தமிழ்ப்பிள்ளைகள் சலம் பூவொடு தூபத்தோடு தமிழோடிசை பாடல்களோடு திருநந்தீச்சரச்சூழலை நிரப்பவதற்கான ஒருங்குகளை தங்கள் இயலுமைக்கும் அப்பால் செய்திருக்கிறார்கள்.

ஆயிரமாண்டு பழமையான நந்தீஸ்வரத்தில் பண்பாட்டு மீட்சியை செய்ய தலைநகர் வாழ் தமிழர்கள் தங்கள் ஆதரவை  இந்த இளைஞர்களுக்கு வழங்குங்கள்.

No comments

Powered by Blogger.