ஓடாத வண்டியில் சீட் பிடிக்க துண்டு விரிக்கும் திராவிட குழந்தை!

இந்திரா காந்தி காலம் தொட்டு, ராகுல் காந்தி வரை காங்கிரசுடன் அரசியல் கூட்டணி வைத்திருந்தவர், தி.மு.க., தலைவராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. 


திராவிட கருத்துகளுக்கு சிறிதும் ஒத்துப்போகாத, பா.ஜ.,வுடனும் கூட்டணி வைத்து, அதை வெற்றிக் கூட்டணி ஆக்கி, மத்திய அமைச்சரவையில், தி.மு.க.,வுக்கு முக்கிய துறைகளை கேட்டு பெற்ற தலைவர் அவர். 

தமிழகத்தில், தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு மேல், தி.மு.க., ஆட்சியில் இல்லாத போது கூட, தேசிய அரசியல் தலைவர்களிடையே, தன் பெயருக்கும், புகழுக்கும் சிறிதும் குறைவு ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொண்டவர் கருணாநிதி என்றால் அது மிகையாகாது. அணி மாறி கூட்டணி வைத்த போது கூட, ‛அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை’ என்ற விளக்கத்தை முன் வைத்தவர் அவர். 
அதே போல், ஒரு கட்டத்தில், அரசியல் தலைவர்களிடையே, பிரதமர் பதவியை பிடிப்பதற்கான போட்டி எழுந்த போது, ‛என் உயரம் எனக்கு தெரியும்’ எனக் கூறி, அதுவரை தான் இருந்த உயரத்தை விட பல மடங்கு உயர்ந்து நின்ற தலைவர் தான் கருணாநிதி.
மாநிலத்தில் ஆட்சி இழந்து, மத்திய கூட்டணியிலும் இல்லாத காலத்தில் கூட, கருணாநிதி, எந்த கட்சி தலைவரையும் வலிய சென்று சந்தித்ததோ, தேவையில்லாமல் புகழ்ந்ததோ கிடையாது. அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அப்படிப்பட்டது.
அவர் வலிய சென்று ஒருவரை சந்தித்தால், நிச்சயம் தான் வகுத்த வியூகத்தில் வெற்றி பெற்றே தீருவார். அதில் ஒரு அர்த்தம் இருந்தே தீரும். அவரின் நகர்வுகள், ஒரு போதும் பொய்த்தில்லை. 
கடைசியாக, ராஜ்யசபா எம்.பி., தேர்தலின் போது, மகள் கனிமாெழியை தேர்வு செய்ய தங்கள் கட்சிக்கு போதிய எம்.எல்.ஏ.,க்கள் பலம் இல்லாததால், தள்ளாத வயதிலும், டில்லி வரை சென்று, பிற கட்சித் தலைவர்களின் ஆதரவு பெற்று, தான் நினைத்ததை செய்து முடித்தார்.
அவரின் ஒவ்வொரு நகர்வும், அர்ஜுனன் கையிலிருந்து புறப்பட்ட அம்பை போல், இலக்கை அடைய தவறியதில்லை. 
அப்படிப்பட்ட தலைவரின் மறைவுக்குப் பின், தி.மு.க., தலைவராக பொறுப்பேற்றுள்ள அவரது நேரடி வாரிசான, ஸ்டாலின், அரசியலில், இன்னமும் பச்சை மண்ணாகத்தான் இருப்பது வேடிக்கை. 
தி.மு.க., தமிழகத்தில் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. தற்போதைய அ.தி.மு.க., அரசோ, ‛நித்ய கண்டம் பூரண ஆயுசு’ என்ற வகையில் செயல்படுகிறது. அந்த கட்சியில் ஏகப்பட்ட உட்கட்சி பூசல் வேறு. 
தமிழகத்தை பல முறை ஆண்ட,  பல முறை மத்திய அமைச்சரவையில் இடம் பெற்ற தி.மு.க., என்ற மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர் என்பதை மறந்துவிட்டாரா ஸ்டாலின்? என்பது போல் உள்ளது, சமீபத்தைய அவரின் செயல்பாடுகள். 



‛உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்கப்பா’ என்ற வடிவேலுவின் டயலாக் போலத்தான் உள்ளது ஸ்டாலினின் செயல்பாடுகள்.
எந்த தலைவர் தன்னை வந்து சந்தித்தாலும் உடனே அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கை; எந்த கட்சித் தலைவர் அழைத்தாலும் அந்த கூட்டத்தில் பங்கேற்பது என்ற ஸ்டாலினின் நிலைப்பாடு, மாபெரும் கட்சித் தலைவருக்கான பாெறுப்பை பிரதிபலிக்கவில்லை என்றே கூறலாம்.
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தமிழகம் வந்தபோது, அவர் முன் மொழிந்த, தேசிய அளவிலான எதிர்க்கட்சி கூட்டணியை ஆதரிப்பதாக, ஸ்டாலின் அறிக்கை விடுத்தார்.
அதன் பின், காங்., தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த அவர், அனைத்து எதிர்க்கட்சிகளும், இதை ஏற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
காங்., - பா.ஜ., அல்லாத மூன்றாவது அணி கூட்டணி அமைத்து, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என, தெலுங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ்., தலைவருமான சந்திரசேகர ராவ் கூறியபோது, அவரையும் வரவேற்றார்.



மாயாவதியும், அகிலேஷும் கூட்டணியிலிருந்து காங்கிரசை கழற்றிவிட்டுள்ள நிலையில், தமிழகத்தில், இவ்வளவு பெரிய அரசியல் கட்சியாக உள்ள தி.மு.க., இன்னமும் காங்கிரசை பற்றிக்கொண்டுள்ளதன் காரணம் தான் புதிராக உள்ளது. 
இந்நிலையில், மேற்கு வங்க முதல்வரும்,திரிணமுல் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில், காேல்கட்டாவில் நடக்கவுள்ள எதிர்க் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்பதாகவும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 
நாயுடு, ராவ், ராகுல், மம்தா என, பல பஸ்களில் வரிந்துகட்டி துண்டு விரிக்கும் ஸ்டாலின், இதில் ஏதாவது ஒரு பஸ்ஸாவது ஓடி விடாதா என்ற ஏக்கத்தில் இருப்பதாகவே தெரிகிறது.
பா.ஜ.,வுக்கான பிரதமர் வேட்பாளர், மாேடிதான் என்பதில் எந்த குழப்பமும் இல்லாமல் உள்ளது அந்த கட்சி. அதே போல், தேசத்தின் வளர்ச்சியில் அக்கறையுள்ள எந்த கட்சி வந்தாலும், கூட்டணியில் சேர்க்க தயாராக இருப்பதாக, பா.ஜ.,தலைமை தெரிவித்துள்ளது. 
ஆனால், எதிர்க் கட்சிகளிடம், மம்தா, மாயாவதி, ராகுல், சந்திரபாபு நாயுடு,சந்திரசேகர ராவ், சரத் பவார், பரூக் அப்துல்லா என பிரதமர் வேட்பாளர்கள் பலர் உள்ளனர்.

முதலில் இவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுவதே கடினம். இதில் கூட்டணி வேறு. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, பஸ்சை நிறுத்தி, டிக்கெட் வசூலிக்கும் இவர்கள், தங்கள் வண்டியில் இன்ஜினே இல்லை என்பதை அறியாமல் உள்ளனர்.
ஊருக்கு, அதாவது கோட்டைக்கு போக வேண்டும் என்பதில் மட்டும் தெளிவிருந்தால் பாேதாது திரு ஸ்டாலின் அவர்களே, அந்த பேருந்தில் இன்ஜின் உள்ளதா, அதை ஓட்டப்போகும் டிரைவர் யார் என்பதையும் பார்க்க வேண்டும். 
ஒரு வேளை, ஓட்டு என்ற ஆயுதத்தால், மக்கள் சக்தியால், அந்த வண்டிக்கு இன்ஜின் கிடைத்து விட்டாலும், பல டிரைவர்கள் அதை ஓட்ட துடிப்பதால், கடைசி வரை அந்த வண்டி ஊர் போய் சேராது. 

இதையெல்லாம் பார்க்கும் போது, ஓடாத வண்டியை தேடித்தேடி சென்று, அதில் சீட் பிடிக்க துண்டு விரிக்கிறாரா ஸ்டாலின் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.