இலங்கை சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் இந்த ஆண்டிலாவது நிறைவேறுமா?

இலங்கை சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த புதிய ஆண்டிலாவது நிறைவேற்றுமா என வடக்கு மாகாண
முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று மலர்ந்துள்ள 2019 ஆம் ஆண்டின் புதுவருட வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, ‘பல எதிர்பார்ப்புக்களுடன் 2019ஆம் ஆண்டு பிறக்கின்றது.
மக்கள் தமது புதிய ஜனாதிபதி, மாகாண, நாடாளுமன்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமையப்போகின்றது.
அத்துடன் இலங்கை சர்வதேசத்திற்கு தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரையில் என்ன செய்தது என்பது குறித்து ஜெனிவாவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டிய ஆண்டாகும்.
2018 ஆம் ஆண்டு டிசெம்பர் 31க்கு முன்னர் எமது மக்களின் காணிகளைத் திருப்பிக் கொடுக்க ஜனாதிபதியால் ஆணையிடப்பட்டிருந்தும், படையினரால் தவணை கோரப்பட்டுள்ளது. அதேபோல் ஜெனிவாவிலும் தவணை கேட்கப்படலாம்.
எமது பிரச்சனைகளைக்காட்டி, தாமதித்து, தீர்வு ஏதும் தராது, தமக்கேற்ற தீர்வுகளை எம்மேல் திணிக்க அரசாங்கம் எதிர்பார்த்திருக்கும் ஆண்டாகவும் இது அமையலாம்.
எது எவ்வாறிருப்பினும் இந்நாட்டு மக்கள் தம்முள் ஐக்கியத்தையும் பரஸ்பர புரிந்துணர்வையும் ஏற்படுத்தி நிறைவுடன் பயணிக்கும் ஒரு ஆண்டாக 2019 அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்‘ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.