பிளவுபடுகிறதா கூட்டமைப்பு?

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அடியோடு நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் அந்த அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்து  ஞாயிற்றுக்கிழமை ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கைத்தீவில் தேசியக் கேள்வியாக பல தசாப்தங்களாக நீடித்துக்கொண்டிருப்பதும், பொதுமக்கள், தமிழ்ப் போராளிகள் மற்றும் சிங்கள படை வீரர்கள் உட்பட இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்ட நீண்டதோர் யுத்தத்திற்கு வழிவகுத்ததுமான இனப்பிரச்சினைக்கு, இலங்கைத்தீவு ஒரே நாடு என்ற வரையறைக்குள் நீதியானதும், நிலைத்து நிற்கக் கூடியதுமான அரசியல் தீர்வு ஒன்றினை, ஜனநாயக வழிமுறைகளுக்கு ஊடாக ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்பதில் நாம் இப்பொழுதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இத்தகைய அரசியல் தீர்வு என்பது சுதந்திர இலங்கைத்தீவில் தமிழ்த் தேசிய இனம் அனுபவித்திருக்கும் பாரபட்சம், அநீதி மற்றும் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்டும் விதத்தில், எமது மரபுவழித் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பூரண சுயாட்சி உரிமை கொண்ட அரசியல் நிர்வாக ஏற்பாட்டினை அமைப்பதாக இருக்கவேண்டும் என்பதிலும், இனப்பிரச்சினையின் அடித்தளமாக இருந்து வந்திருக்கும் ஒற்றையாட்சி முறைக்குப் பதிலாக, சமஷ்டி ஆட்சி முறை என்று அழைக்கப்படும் இணைப்பாட்சி முறையில் அமையவேண்டும் என்பதிலும் எமது கட்சியும்

அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் ஆதரவையும் ஆணையையும் கடந்த தேர்தல்கள் பலவற்றில் தொடர்ந்து பெற்று வந்திருக்கின்றது. எமது மக்களுக்கு நாம் அளித்த வாக்குறுதிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க முடியாது.

இந்த அரசியல் பின்னணியில், இப்பொழுது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையை கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில், அதனை நிராகரிப்பதைத் தவிர வேறு தெரிவு எதுவும் எமக்கு இல்லை என்பதை நாம் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டியுள்ளது.

இந்த நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒற்றையாட்சி முறை தொடர்ந்து நீடிப்பதற்கு மிகச் சாதுரியமாக பிரேரிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன், பௌத்த மதத்திற்கு இப்போதுள்ள அரசியல் சாசனத்தின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அரசமதம் என்னும் சட்ட அந்தஸ்த்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவதற்கும் வழி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டின் ஏனைய மதங்கள் தொடர்ந்தும் அநாதை மதங்கள் போல கணிக்கப்படுவதற்கும், நடாத்தப்படுவதற்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

மேலும், அதிகார பங்கீடு விடயத்தில், அதனை விஸ்தரித்து, வலுப்படுத்தி முழுமைப்படுத்துவதற்கு பதிலாக, அரைகுறையான அதிகாரங்களை மாத்திரமே மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் பதின்மூன்றாவது திருத்தத்துக்கு அப்பால் ஆக்கபூர்வமாக எந்தவொரு முன்னேற்றகரமான யோசனையும் காணப்படவில்லை.

அதே நேரத்தில் அரச காணிகள் விடயத்தில், நிலப்பங்கீடுகள் வழங்குவதில் பாரிய சிங்களக் குடியேற்றங்களுக்கு அடிகோலியுள்ள மகாவலி அபிவிருத்தித் திட்டம் உட்பட இப்போது செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் இப்போதைய நடைமுறைகளே தொடர்ந்தும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழினத்தின் தாயகம் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தால் தொடர்ந்து சூறையாடப்படுவதை இது உறுதிப்படுத்தும்.

அத்துடன், சட்டமன்றத்தின் இரண்டாவது சபையாக பிரேரிக்கப்பட்டிருக்கும் யோசனையின்படி, மாகாணசபைகள் மூலம் பிரதிநிதிகள் அச்சபைக்கு

தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பதிலாக, மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் இருந்தே அத்தெரிவு இடம்பெறுவது என்பது, மாகாணசபைகளின் சுயாதீனத்தை கேள்விக்குரியதாக மாற்றுவதோடு, ஒற்றையாட்சி முறைக்கு வலுவூட்டுவதுமாகவே அமையும்.

எமக்கு அருகில் உள்ள இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவையை மாதிரியாகக் கொண்டு, இந்த யோசனை தயாரிக்கப்படாதது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றே கருதவேண்டியுள்ளது.

தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான இணைந்த வடகிழக்கு மாநிலம் என்பது வெறும் அரசியல் கனவாகவே நீடிக்கக் கூடிய விதத்தில், அருகருகாக அமைந்திருக்கும் இரண்டு அல்லது மூன்று மாகாணங்களின் இணைப்புப் பற்றிய பிரேரணை அமைந்திருக்கிறது என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்த விவகாரத்தில் இப்போதுள்ள அரசியல் சாசன ஏற்பாட்டிற்கு மேலதிகமாக சம்பந்தப்பட்ட மாகாணங்களில் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற விடயமும் புதிதாக புகுத்தப்பட்டுள்ளது.

சிங்களக் குடியேற்றத்தால் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்கு மாகாணத்தை வடக்கிலிருந்து தொடர்ந்து தனிமைப்படுத்தி வைப்பதற்கு ஏதுவாக இந்தச் சர்வஜன வாக்கெடுப்பு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளைத் தொடர்ந்து நிராகரித்து, சிங்கள பௌத்த பெரும்பான்மையினரின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் விதத்தில், இந்தத் தீர்வுத் திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்பதனை நாம் திட்டவட்டமாகவும் தெட்டத்தெளிவாகவும் தெரிவிக்கத் தவறினால் எமது மக்களுக்கு துரோகம் செய்தவர்களாகிவிடுவோம்.

எமது தாயகத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திப் போராடி, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்து, கடந்த முப்பத்தியொரு ஆண்டுகளாக தொடர்ந்து செயற்பட்டு வந்திருக்கும் எமது அமைப்பு, எமது மக்களின் தேசிய அபிலாஷைகளை நிறைவேற்றி வைக்கக்கூடிய நீதியான அரசியல் தீர்வுக்காக தொடர்ந்தும் பாடுபடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.