‛மனைவியை கொலை செய்ய 2 நாள் லீவு குடுங்க ப்ளீஸ்’

மனைவியை கொலை செய்ய, இரண்டு நாட்கள் விடுப்பு கோரி, வங்கி மேலாளர் ஒருவர், தன் உயர் அதிகாரிகளுக்கும், மத்திய அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பீஹார் மாநிலம் பக்ஸரை சேர்ந்தவர் முன்னா பிரசாத். அங்குள்ள கிராம வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி, சிறுநீரக பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால், முன்னா பிரசாத், அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டியிருந்தது. ஓர் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக விடுப்பு எடுத்ததால், இதற்கு மேலும், விடுப்பு வழங்க, அவரது உயர் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

இதனால் விரக்தி அடைந்த முன்னா பாய், தன் மனைவியை கொலை செய்து விட்டு, அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ய, இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்கம் படி, தன் மேலதிகாரிக்கு கடிதம் எழுதினார்.

இதன் நகலை, பாட்னாவில் உள்ள வங்கியின் தலைமையகம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரின் அலுவலகம், பிரதமர், ஜனாதிபதியின் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கி நிர்வாகம் உடனடியாக அவருக்கு விடுப்பு வழங்கி உத்தரவிட்டது. தன் மனைவியின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாவதால், அவரை கவனித்து கொள்ள தனக்கு அதிக நாட்கள் விடுப்பு தேவைப்படுவதாகவும், அதன் காரணமாகவே, இப்படி கடிதம் எழுதியதாகவும், முன்னா மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

முன்னாவின் இந்த செயல், வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.