பாண்டியாவுக்கு பிரச்னை வர நான் தான் காரணம்: கரண் ஜோஹர்

ஹர்திக் பாண்டியா மற்றம் கே.எல்.ராகுலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து முதல் முறையாக கரண் ஜோஹர் கருத்து தெரிவித்துள்ளார்.


காபி வித் கரண் நிகழ்ச்சியில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும், அதனைப் பற்றி தனது வீட்டில் வெளிப்படையாக பேசுவதையும் பற்றி ஹர்திக் பாண்டியா கூறியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.  இது குறித்து பிசிசிஐயிடம் இருந்து பாண்டியா மற்றும் ராகுலுக்கு எச்சரிக்கை அனுப்பபட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் பேசியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாண்ட்யா சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

பாண்ட்யா மற்றும் கே. எல்.ராகுலை 2 தொடர்களில் விளையாடுவதற்கு தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து ஆஸ்திரேலியாவில்  நடைபெற்றுக் கொண்டிருந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இருவரும் இந்தியா திரும்பினர். மேலும் பாண்டியாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்திக்கொண்ட நிறுவனங்களும் அதனை ரத்து செய்தனர்.

இதனையடுத்து உலகக் கோப்பை போட்டிகளை கருத்தில் கொண்டு பாண்டியா, ராகுல் மீதான தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகக்குழுவுக்கு பொறுப்புத் தலைவர் சி.கே.கண்ணா வலியுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநரும் காபி வித் கரண் நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கரண் ஜோஹர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அவர், "தற்போது நடந்தவற்றுக்கு நான் தான் பொறுப்பு என்பதை போல உணர்கிறேன். அது என்னுடைய நிகழ்ச்சி. நான் தான் அவர்களை விருந்தினர்களாக அழைத்தேன். நான் தான் அவர்ளிடம் கேள்வி கேட்டேன். இந்த பிரச்னையை எப்படி சரி செய்வது என்பதை யோசித்தே பல இரவுகளை கழித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால் அனைத்தும் தற்போது சரி செய்ய முடியாத நிலைக்கு சென்றுவிட்டது.

நான் என்னை பாதுகாத்து கொள்வதற்காக இதை கூறவில்லை. நான் அவர்கள் இரண்டு பேரிடமும் கேட்ட கேள்விகளை தான் என் நிகழ்ச்சிக்கு வரும் அனைத்து விருந்தினர்களிடமும் கேட்டேன். தீபிகா மற்றும் ஆலியாவிடமும் இதையே தான் கேட்டேன். அவர்கள் கூறும் பதில்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. நான் டிஆர்பிக்காக தான் இதையெல்லாம் செய்வதாக கூறுகிறார்கள். நான் டிஆர்பி பற்றி கவலைப்படுபவன் அல்ல.

பாண்டியாவும் ராகுலும் எல்லை மீறி பேசியதற்கான வினையை அனுபவித்து விட்டனர் என்றே நான் நினைக்கிறேன்" என்றார்.   

No comments

Powered by Blogger.