பிரியங்காவை கண்டு ஏன் அஞ்ச வேண்டும் – குஷ்பு!!

தீவிர அரசியலில் இறங்கியுள்ள பிரியங்காவை கண்டு பாரதிய ஜனதா விமர்சனம் செய்வது ஏன் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். இதையடுத்து பிரியங்கா குறித்து பாரதிய ஜனதாவினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

இந்தநிலையிலேயே காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “பிரியங்கா காந்தி எத்தனையோ ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியில் ஈடுபட்டு வருகிறார். பல முறை தேர்தல் பிரசாரங்களும் செய்துள்ளார்.

எங்கள் கட்சியில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பெண் முன்னேறி இருக்கிறார். அவரும் வரட்டுமே. பா.ஜனதாவினர் ஏன் பயப்பட வேண்டும்.

அவர்களுடைய விமர்சனத்தின் மூலமே, பிரியங்காவை கண்டு அவர்கள் பயந்து நடுங்குவது தெரிகிறது. உத்தரபிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியின் பொறுப்பு மட்டும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில்தான் மோடி தொகுதியும், யோகி ஆதித்யநாத் தொகுதியும் வருகிறது.

எங்கே நாம் தோற்று விடுவோமோ என்று பயந்து நடுங்குகிறார்கள். ஒரு மாநிலத்தின் பொறுப்புக்கு வந்ததும், நாடு முழுவதும் பா.ஜனதாவினர் பிரியங்காவை விமர்சிப்பது ஏன்?

குடும்ப அரசியல் என்கிறார்கள். பா.ஜனதாவில் குடும்ப அரசியல் இல்லையா. 44.4 சதவீதமானவர்கள் ஏதோ ஒரு வகையில் அரசியல் தலைவர்களின் பின்புலத்தில் வந்த வாரிசுகள் தான். எனவே பா.ஜனதாவினருக்கு குடும்ப அரசியல் பற்றி பேச தகுதி இல்லை.

தமிழக காங்கிரசில் நிலவும் குழப்பம் குறித்து டெல்லி மேலிடத்திடம் புகார் செய்வதற்காக எல்லோரும் சென்றதாக கூறுகிறார்கள்.

இது தவறு. ஒவ்வொரு வரும் தனிப்பட்ட அரசியல் பணிகளுக்காக எல்லோரும் ஒரே சமயத்தில் டெல்லி சென்று இருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைமையில் மாற்றம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

காங்கிரசை ராகுல் காந்தி கட்சி என்று சொல்ல மாட்டார். இயக்கம் என்றுதான் கூறுவார். அந்த இயக்கத்தில் இருக்கும் அனைவரும் அவரது பாணியிலேயே செயல்பட வேண்டும். அதை விட்டு விட்டு நானே ராஜா, நானே மந்திரி என்பது போல் நடந்து கொள்ளக் கூடாது“ என தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

Powered by Blogger.