இசை கடவுளுக்கு ஒரு ஆராதனை!

பக்தியையும் இசையையும் ஒன்றாக பாவித்த இசைமகான் இவர். இப்படித்தான் ராகங்கள் இருக்கும் என்று இல்லாமல் ஒரே ராகத்தில் பல கீர்த்ததனைகள் பாடி தம் இசையால் இறைவனையும், நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் புகுத்தியவரும் இவரே.
அபூர்வ ராகங்களை உண்டாக்கி, அதிலும் கீர்த்தனைகள் படைத்தவரும் இவரே..மடைதிறந்த வெள்ளமாய் வெளிவரும் இவரது பாடல்களைக் கேட்க ஸ்ரீமந் இராமனே நேரில் வருவார் என்று இவரது சரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனின் புகழ்ச்சியைப் பாடுவது மகிழ்ச்சியா.. மனிதரின் புகழை பாடுவது மகிழ்ச்சியா என்று கேள்வி கேட்டு, இறைவனை இசையாலேயே அடைந்த இசை மகானும் இவர்தான்... கர்நாடக சங்கீதத்தில் இசைக்கடவுளாக வணங்கப்படுபவரும், பாராட்டப்படுபவரும் இவர்தான்.  அவர் தான் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்.

1767 ஆம் ஆண்டு முக்தி தரும் ஊரான திருவாரூரில் பிறந்தவர் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். இசையையும், இறைவன் பால் கொண்ட பக்தியையும் இரு கண்களாக பாவித்து வளர்ந்தவர். நாளொரு வண்ணம் இராமபிரானைத் துதித்து  இவர் பாடிய கீர்த்தனைகள் கேட்பவர் உள்ளத்தை உருக்குவதுடன் இறைவனிடம் மனதை நாட்டம் கொள்ள வைக்கும். எல்லாமே இறைவனே என்னும் எண்ணத்தை தூண்டுவதாக இருக்கும். இசையில் ஞானமில்லாதவர்கள் கூட இவரது இசையை கேட்கும் போது தன்னிலை மறந்து இசையில் மூழ்குமளவுக்கு  ரசனை உண்டாகும். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் இவை மிகவும் பிரசித்திபெற்றது என்று உதாரணத்துக்கு ஒன்றை சொல்ல இயலாத அளவுக்கு, ஒன்றை ஒன்று சிறப்பாக்கும் வகையில் ராகத்திலும் ,அப்பாடலின் பொருளும், பக்தியும் அமைந்திருக்கும்.

கல்யாணி ராகத்தில் அவர் பாடிய நிதி சால சுகமா.... என்னும் பாடலை இன்றும் யார் பாடினாலும் நெஞ்சம் உருகிவிடும். இப்பாடலுக்கு அவ்வளவு சக்தி உண்டு.மனதை மீட்டெடுக்கும் நாதமாக ஒலிக்கும் இப்பாடல் ஒராயிரம் முறை கேட்டாலும் திகட்டாது. இசைக்காகவே பிறப்பெடுத்த இம்மகான் 1847 ஆம் ஆண்டு இறைவனிடம் சென்றடைந்தார். இவருடைய சமாதி திருவையாறில் காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்  மறைந்த பகுள பஞ்சமி திதியில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்வ சபை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருவையாறில் இசை ஆராதனை விழா இவரது சமாதிக்கு அருகில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 172 வது ஆராதனை விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஐந்து நாட்களுக்கு முன்னதாக தொடங்கிய இசைஆராதனை விழா மங்கள இசையுடன் தொடங்கியது. இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். விழாவின் நிறைவு நாளான இன்று தியாகப்பிரம்மம் என்று அழைக்கப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இல்லத்திலிருந்து தியாகராஜரின் சிலை ஊர்வலமாக பஜனையுடன், விழா பந்தலுக்கு எடுத்துவரப்படும். இன்றைய தினத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி பஞ்சரத்ன கீர்த்தனைகள் ( நாட்டை, கெளளை, ஆரபி, வராளி, ஸ்ரீ ராகம்) பாடி, பக்க வாத்திய கலைஞர்கள் இசையுடன் ,தியாகப்பிரம்மத்துக்கு அஞ்சலி செலுத்துவார்கள். இன்று இரவு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறும்.

ஏராளமான இசைக்கலைஞர்கள், இசைப்பிரபலங்கள் திருவையாறில் ஒன்றிணைந்து இசைக் கடவுளான தியாகப்பிரம்மத்துக்கு இசையால் அஞ்சலி செலுத்தும் இத்தருணத்தில் திருவையாறு முழுவதும் இசையொலி காற்றில் கரைந்து காவேரி ஆற்றங்கரையை பக்தி மணம் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த இசைக்காற்றை சுவாசிக்க இயலாதவர்கள் இசை மகானை வணங்கி அவரது பாடலை கேட்டு இசையால் மகிழ்ந்திருப்போம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.