புதிய அரசமைப்பு கூட்டாட்சிப் பண்புகளுடனேயே வருகிறது!
இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும்திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மையச் செயற்குழுக் கூட்டம் கொழும்பு, ஆமர் வீதி – பிரைட்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையிலும், நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்திலும் கூட்டாட்சிப் பண்புகள் காணப்படுகின்றன. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டுள்ளன. கொழும்பு அரசு திரும்பப் பெற முடியாத வகையில் மாகாண சபைகளிடம் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஓரிடத்தில் அதிகாரங்கள் குவிந்திருந்தால்தான் அது ஒற்றையாட்சி. அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டால் அது கூட்டாட்சி. எனவே, இதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். சொற்பதங்களை – சொல்லாடல்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நாம் முரண்படக்கூடாது.
வடக்கு, கிழக்கு மக்களிடம் உண்மை நிலைமையை நாம் தெளிவுபடுத்த வேண்டும். மக்களைக் குழப்பும் விதத்தில் எவரும் கருத்துக்களை வெளியிடக்கூடாது. தெற்கில் உள்ள மக்களை சமாளிப்பதற்காக அரச தரப்பினர் சொல்லாடல்களைத் தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துவார்கள். இதை நாம் தூக்கிப் பிடிக்கக்கூடாது. புதிய அரசமைப்பு நிறைவேற அனைத்து வழிகளிலும் நாம் ஒத்துழைக்க வேண்டும்.
ஒக்ரோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சியை ஜனநாயக வழியில் முறியடிக்க நாம் பெரிதும் உதவினோம். பன்னாட்டுச் சமூகம் எமது பக்கம் நிற்கின்றது. இலங்கை மீதான பன்னாட்டு அழுத்தங்களும் எமக்குச் சார்பாக உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். தமிழர்களாகிய எமது இலக்கை அடைய ஓரணியில் பயணிக்க வேண்டும். எமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது.
சில தினங்களுக்கு முன் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் என்னைச் சந்தித்துச் கலந்துரையாடினார். இதன்போது இலங்கையின் ஏற்பட்ட அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் பேசினோம். ஒரு கட்டத்தில் அவர், ‘தமிழ் மக்கள் தொடர்ந்தும் உங்களை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை) ஆதரிப்பார்களா? இதில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்களா?’ என்று வினவினார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். எமது மக்களின் நிலைப்பாட்டை அவரும் எடுத்துரைத்தேன்.
எமது மக்களின் மனதை வெல்லும் வகையில் நாம் செயற்பட வேண்டும். அவர்கள் எம் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனினும், அந்த நம்பிக்கையை நாம் செயல் வடிவில் உறுதிப்படுத்திக் காட்ட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலோ அல்லது மாகாண சபைத் தேர்தலோ நடைபெற்றால் அதில் எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்ய வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 16 உறுப்பினர்கள் எமது கட்சியில் தெரிவானார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கச் செய்ய வேண்டும் – என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை