அச்சாணி...!

கரும்புலிகளே
அண்ணாந்து பார்த்த
அசாத்திய வீரன்
பிரபாகரனே
காண ஏங்கிய
சமரசமற்ற போராளி
மாவீரர் பட்டியலே
தன்னுள் ஏற்று கொண்ட
நிகரற்ற மாவீரன்
தன்னாட்டவனாய் ஈழமே
அறிவித்து கொண்ட
அயல்நாட்டுகாரன்
முத்துக்குமார்

பெருந் தீ
எதிலிருந்து உருவாகின்றது?
துளியளவு நெருப்பிலிருந்து!
ஈழத்திற்காக தமிழகத்தை
தீயாக்கிய முதல் தீ
முத்துக்குமார்!

ஒற்றை துளி ஒன்றிலிருந்துதான்
பேராறும் பெருமழையும் தொடங்கியிருக்கும்
ஈழத்தின் கோரத்தை
உலகம் முழுவதும் விதைத்த
முதல் நெருப்புத் துளி
முத்துக்குமார்!

இந்தியா காந்திய தேசம்
இல்லவே இல்லை
திலீபனுக்கு பிறகும் அது
திருந்தவே இல்லை
இலங்கை புத்தன் பூமி
இல்லவே இல்லை
கிருசாந்திக்கு பிறகும்
அது மாறவே இல்லை
உலகம்
அதற்கு
கண்ணும் இல்லை
காதும் இல்லை
இதயமும் இல்லை
முத்துக்குமார் கடிதத்தின் பின்பும்
தமிழர் நியாயத்தை
உணர்ந்ததாய் இல்லை

இந்தியா நேதாயியை மறக்காது
கியூபா சேகுவேராவை மறக்காது
சீனா மாசேதுங்கை மறக்காது
அதே போலத்தான்
ஈழம் முத்துக்குமாரை மறக்காது!

ஈழம் எப்படியும் மலரும்
அது எதோ ஒரு வழியில் நிகழ்ந்தே தீரும்
அப்போது நாங்கள்
கண்டிப்பாக
விடுதலைப்புலிகளை
போராளிகளை
மாவீரர்களை
கரும்புலிகளை
மாண்ட மக்களை
மாமனிதர்களை
நாட்டு பற்றாளர்களை
எப்படியும் மறவாது நினைவு கூருவோம்
இவர்களால்தான் ஈழம் மலர்ந்தது என்று
நெஞ்சுருகுவோம்.
அப்படித்தான்
அந்த நேரத்தில்
முத்துகுமாரையும் அவரின் முன்பே எரிந்த
ராகூப்பையும்
தொடர்ந்த்தெரிந்த வீரமறவர்களையும்
நினைத்து பார்ப்போம்
நெக்குருகுவோம்
நெஞ்சில் நிறுத்துவோம்
ஈழ விடுதலை சக்கரத்தின்
அச்சாணி இவர்கள் என்று
வீர முரசறைவோம்!

            வி.மயூரன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.