ஊடகவியலாளர் கஷோக்கி படுகொலை: ஐ.நா. அறிக்கை ஜுனில்!
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை எதிர்வரும் ஜுன் மாதம் வெளியிடப்படவுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஜுன் மாத அமர்வில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
படுகொலை விசாரணையில் ஈடுபட்டுவரும் மரண தண்டனைக்கான ஐ.நா. சிறப்பு தூதுவர் எக்னஸ் களமார்ட் இன்று (செவ்வாய்க்கிழமை) இதனை அறிவித்துள்ளார்.
படுகொலை குறித்து ஆராயும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு வார பணி துருக்கியில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில், விசாரணைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நா. தூதுவர், ”சவுதி தூதரகத்திற்குள் செல்வதற்கும், சவுதி அதிகாரிகளை சந்திப்பதற்கும் சவுதி அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அதன்படி அவர்களது அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
எவ்வாறாயினும் விசாரணைகளை நிறைவுசெய்து அறிக்கையை எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் சமர்ப்பிப்போம்” எனத் தெரிவித்தார்.
இஸ்தான்புல்லில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் வைத்து ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் படுகொலை செய்யப்பட்டார்.
ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி படுகொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஐ.நா. விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்படுகொலைக்கு சவுதி இளவரசரின் அதிகாரிகளே காரணம் என தெரிவித்து சவுதி மீது குற்றம் சாட்டப்பட்டது.
ஆனால், இப்படுகொலைக்கும் சவுதி இளவரசருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்து ரியாத் இக்குற்றச்சாட்டை தொடர்ச்சியாக மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை