திறமையான இளம் வீரர்களின் ஆட்டத்தை இனிமேல் பார்ப்பீர்கள்!’ - ரிலாக்ஸ் கோலி

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றிபெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் மீதமிருக்கும் நிலையிலேயே 3-0 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி சாதித்திருக்கிறது.


முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 49 ஓவர்களில் 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 93 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில், ஷமி 3 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார், சஹால் மற்றும் சர்ச்சைக்குப் பின் களமிறங்கிய பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 244 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 43 ஓவர்களில் இலக்கை எட்டியது. ரோஹித் ஷர்மா 63, கேப்டன் கோலி 60 ரன்கள் சேர்த்தனர். 

போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ``தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்திரேலியத் தொடர் தற்போது இந்தத் தொடர் என இடைவெளி இல்லாமல் விளையாடி வருகிறோம். தற்போது 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிவிட்டோம். எனவே, எனக்கு அளிக்கப்பட்ட ஓய்வை நான் மிகவும் ரிலாக்ஸாகக் கழிப்பேன். அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்கள் சிலர், தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் காத்திருக்கின்றனர். சுப்மன் கில், வலைப்பயிற்சியின் போது பேட்டிங் செய்வதைப் பார்த்தேன். 19 வயதில் அவர் பேட்டிங் செய்துவரும் திறனில், 10 சதவிகிதம் கூட என்னிடம் இல்லை’’ என்றார்.

பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அந்தப் போட்டிகளில் களமிறங்குகிறது.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ``அவர்கள் (இந்திய அணி) எங்களுக்குப் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். எதிரணிக்கு அளிக்கும் சவாலின் அளவை மேம்படுத்த வேண்டிய தருணம் இது. இன்றைய போட்டியைப் பொறுத்தவரை சில இடங்களில் எங்களது ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். ராஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பௌலிங்கைப் பொறுத்தவரை ஓ.கேதான் என்றாலும், போட்டியின் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்த வேண்டிய அவசியம் இருக்கிறது’’ என்றார்.

தொடரில் 3 போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்ற ஷமி, `காற்றுக்கு எதிர்த்திசையில் பந்துவீசுவது சவாலாக இருந்தது. ஆனால், மறுமுனையில் புவனேஷ்வர் குமார் இருப்பதால், அந்த சவாலை எளிதாக எடுத்துக்கொள்ள முடிந்தது’’ என்றார்.   
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.