மனித எலும்புக்கூடுகளை காபன் பரிசோதனைக்கு அனுப்பும் திகதி அறிவிப்பு

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகளை காபன் பரிசோதனைக்காக இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள், கடந்த 10 தினங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) 122ஆவது நாளாக அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இதன்போது அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சமிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மனித எலும்புக்கூடுகள் இன்று அகழ்வு செய்யப்படவில்லை. இப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணத்தால் அகழ்வு செய்யப்படும் பகுதி பாதிப்படைந்துள்ளது.

இதனால் குறித்த பகுதியை  சீர்செய்து அகழ்வு இடம்பெறும் பகுதியைச் சுற்றி, மறைப்பு வேலி அமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மேலும் இன்றைய தினம் மன்னார் நீதவானுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், அகழ்வு மேற்கொள்ளப்படும் இடத்திலுள்ள வீதிகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் காபன் பரிசோதனைக்காக புளோரிடாவுக்கு  அனுப்பிவைக்கப்படவுள்ளன. இதன்போது மரணம் தொடர்பில் உண்மையான காரணங்களை கண்டறிய முடியும்” என சமிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 280 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 274 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 20 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென நம்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.