ஸ்டெர்லைட் கோரிக்கை: நிராகரித்த வாரியம்!

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு கொடுப்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், வேதாந்தா நிறுவனத்தின்
கோரிக்கையைப் பரிசீலிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்று கோரி, கடந்த மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து, மே 28ஆம் தேதியன்று ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்திவரும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதையடுத்து, நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்து, அறிக்கையைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில், கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று ஆலையைத் திறக்கத் தடையில்லை என்று தீர்ப்பு வழங்கியது பசுமைத் தீர்ப்பாயம். “தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்க வேண்டும், ஆலையைத் திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தூத்துக்குடி ஆட்சியர் செய்து தர வேண்டும்” என்று ஸ்டெர்லைட் ஆலை குறித்த தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று (ஜனவரி 2) உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. “ஸ்டெர்லைட் ஆலை மாசு காரணமாக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்வதற்கு முன்னரே, உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக வேதாந்தா சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பசுமைத் தீர்ப்பாயம் குறிப்பிட்டபடி, ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்புப் பணிக்கு மின் இணைப்பு வழங்குமாறு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கோரிக்கை விடுத்தது வேதாந்தா நிறுவனம். உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருப்பதால் பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது எனவும், ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்துப் பரிசீலிக்க முடியாது எனவும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சம்பு கல்லோலிகர் வேதாந்தா நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.