அசலும், வட்டியும்: தள்ளாடும் ஜெட் ஏர்வேஸ்!

அதிக கடன் சுமை மற்றும் நிதி நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கான வட்டித் தொகையைச் செலுத்தாமல் ஜெட்
ஏர்வேஸ் நிறுவனம் தாமதித்துள்ளது.
தனியார் துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், கடுமையான வருவாய் இழப்பைச் சந்தித்து வருவதோடு, பெருத்த கடன் சுமையில் சிக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உரிய நேரத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க இயலாமல் இந்நிறுவனம் தடுமாறி வருகிறது. செலவைக் குறைக்கும் விதமாக, தனது ஊழியர்களில் சிலரை பணிநீக்கமும் செய்துள்ளது. கடன் சுமை காரணமாக, அக்டோபர் மாதத்துக்கான சம்பளத்தில் பாக்கி வைத்துள்ள ஜெட் ஏர்வேஸ், நவம்பர் மாத சம்பளத்தையும் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் வங்கிகளிடம் பெற்ற கடன்களுக்கான வட்டியையும் செலுத்த முடியாமல் இந்நிறுவனம் போராடி வருகிறது.
இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்காலிக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் வங்கிகளுக்கான வட்டித் தொகையையும், முதன்மை தவணை பாக்கியையும் எங்களால் சரியான சமயத்தில் செலுத்த முடியவில்லை. 2018 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அத்தொகையை நாங்கள் செலுத்தியிருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2018ஆம் ஆண்டில் சந்தையில் கடுமையான போட்டி, விமானக் கட்டணங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம், விமான எரிபொருள் விலையேற்றம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணிகளால் இந்திய விமான நிறுவனங்கள் நெருக்கடியான சூழலுக்கு ஆளாகின. அதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிக மோசமான விளைவுகளைச் சந்தித்து வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.