26 அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட்!

மேகதாட்டு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை மக்களவை
சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேகதாட்டு அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்ய கர்நாடகத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நாடாளுமன்றம் தொடங்கிய நிலையில், மேகதாட்டு அணைக்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களவையில் இன்றும் (ஜனவரி 2) மேகதாட்டு விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டது. மேலும் சில உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பு காகிதங்களை கிழித்து பறக்கவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, அவையை நடத்த விடாமல் அமளியில் ஈடுபட்டதாக அதிமுக எம்.பி.க்கள் 26 பேரை , 374 ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவருக்கும் 5 அமர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
மாநிலங்களவை தொடங்கியதும், மேகதாட்டு பிரச்சினையை வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய நிலையில் அவைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, மேகதாட்டு விவகாரம் குறித்து நிதின் கட்கரி விளக்கம் அளிக்க இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அனுமதியைத் திரும்பப் பெற வேண்டுமென அதிமுக, திமுக எம்.பி.க்கள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து, அதிமுக, திமுக உறுப்பினர்களின் பெயரைக் கூறி அவர்களை அவையிலிருந்து வெளியேறும்படி வெங்கைய்ய நாயுடு உத்தரவிட்டு பிற்பகல் 3 மணி வரை அவையை ஒத்திவைத்தார். மீண்டும் தொடங்கிய நிலையில், அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.