கற்றாளை பிடுங்கியவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்-பொன்னாலையில் சம்பவம்!

பொன்னாலையில் கற்றாளைக் கன்றுகளைப் பிடுங்கி வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்ட தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (30) பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.


மருத்துவ குணமுடைய இயற்கை மூலிகையான கற்றாளைக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் தற்போது கற்றாளைக் கடத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது. தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களும் உள்ளுர் வாசிகளும் கற்றாளையைப் பிடுங்கி விற்பனை செய்து வருகின்றனர்.

தீவகம் உள்ளிட்ட சில இடங்களில் கற்றாளைக் கன்றுகளைப் பிடுங்கிச் செல்வோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறியரக வடி வாகனத்தில் வருகை தந்த தென்னிலங்கைச் சிங்களவர்கள் நால்வர் பொன்னாலை மயானத்திற்குச் செல்லும் வீதியில் கற்றாளைகளைப் பிடுங்கினர். இதை அவதானித்த சமூக ஆர்வலர் செ.றதீஸ்வரன் அப்பகுதி பிரதேச சபை உறுப்பினருக்கு அறிவித்தார்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள் இருவரும் கற்றாளைப் பிடுங்கியவர்களை எச்சரித்ததுடன் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முற்பட்டனர்.

வவுனியாவில் உள்ள பாம் ஒன்றுக்கே கற்றாளைகளைக் கொண்டு செல்வதாகக் கூறிய அவர்கள் குறிப்பிட்டளவான கற்றாளைகளைப் பிடுங்கிச் செல்ல அனுமதிக்குமாறு தென்னிலங்கை வாசிகள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், இயற்கை மூலிகையான கற்றாளையை முற்றாகப் பிடுங்கிச் செல்ல அனுமதித்தால் அது அழிவடைந்துவிடும் என்பதை எடுத்துக் கூறிய மேற்படி இருவரும், அவர்கள் பிடுங்கிய கற்றாளைகளை மட்டும் கொண்டுசெல்ல அனுமதித்து திருப்பி அனுப்பினர்.

மருத்துவ தேவைக்கு கற்றாளைகளைக் கொண்டு செல்வதாயின் வலி.மேற்கு பிரதேச செயலகத்தில் அனுமதி பெற்று வாருங்கள் எனவும் அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் உள்ள சில மரக்கன்று விற்பனை பண்ணைகளில் ஒரு கற்றாளைக் கன்று 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.