பாடுநிலாவே பாகம் 12இரண்டே நாட்களில் பத்து வருடங்களாக தாயாக அரவணைத்த அந்த இடத்தையும் அங்கிருந்த உறவுகளையும் விட்டுப் புறப்பட்டாள் சாதனா.
இப்படி ஒரு நாள் வருமென்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளுக்கு அடைக்கலம் தந்து பராமரித்து, அன்பு காட்டி, அரவணைத்த அந்த இடத்தை அவளது வாழ்வில் என்றுமே மறந்துவிடமுடியாது. அவளது தலையில் அன்பாய் வருடிய தலைமை சிஸ்ரர், “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக மகளே” என்றார்.

“நன்றி ----நன்றி சிஸ்ரர்” என்றபோது அவளது குரல் உடைந்துபோனது. இந்தியாவில் அவள் தங்கி சிகிச்சை பெறுவதற்கான விடுதியையும் அவரே ஏற்பாடு செய்திருந்ததனால் சாதனாவின் மனதில் நன்றி உணர்வு பெருகிக்கிடந்தது. பார்வை இழந்துவிட்ட அவளது விழிகளில் இருந்து கண்ணீர் “பொல பொல” வென வடிந்தது.

மெல்ல அருகில் வந்த காங்கேசன், “ சாதனா, நீ குணமாகி திரும்பவும் இங்கதானே வரப்போறாய், அங்க இருக்கப்போறது கொஞ்ச நாட்கள் தானே, அதுக்காக இப்பிடி அழலாமா?” என்றான்.
சாதனாவிற்கு மனதின் ஓரம் லேசாய் வலித்தது, காரணம் தெரியாமல்.

இசையாளன், வாகனத்தை கவனமாகச் செலுத்திக் கொண்டிருந்தான்,    புனரமைக்கப்பட்ட அந்த வீதிகளில் வழுக்கிக்கொண்டிருந்தது வாகனம். தாயின் அருகில் அவரது கரம் பற்றியபடி ஒரு குழந்தையாய் அமர்ந்திருந்த சாதனாவைக் கண்டபோது காங்கேசனின் மனதில் பரவசம் பொங்கியது. இப்படி ஒரு நிகழ்வை இவ்வளவு விரைவில் அவன் எதிர்பார்க்கவே இல்லை. முழுதாகப் பத்து வருடங்கள் அவளைப் பார்க்கமுடியாமல் கழிந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் எத்தனையோ தோழிகளைக் கண்டுவிட்டான். பழகிவிட்டான். ஆனாலும் சானாவின் இடம் அப்படியே தான் இருந்தது. இது அவளுக்கு மட்டுமே சொந்தம் என்பது அவனுக்குத்தான் தெரியும். அவள் அவனுக்குள் உறைந்திருப்பவள், வெளியே சொல்லாத. அவளிடம் சொல்லமுடியாத நேசம் ஒன்று அவனது உள்ளத்தில் படர்ந்து கிளை பரப்பியிருந்தது.

சாதனாவின் மீதான அவனது நட்பு காதலாக மாறியது எப்போது? உதட்டில் புன்னகை அரும்பியது காங்கேசனுக்கு.

திரும்பி அவளைப் பார்த்தான். மகிழ்வில் உள்ளம் பூரித்தது. அவன் நேசித்த அந்த விழிகளா, இப்படி குழியாகிக் கிடக்கிறது, எப்பாடுபட்டேனும் அந்த விழிகளை மலரச்செய்துவிடவேண்டும் என எண்ணினான், தன் விழிகளையேனும் அவளுக்குப் பொருத்தி இந்த உலகைப் பார்க்க வைத்துவிடவேண்டும் என ஆவேசமாக அவனுள் ஒரு எண்ணம் தோன்றியது. அவளது நேர்த்தியான முகம், அவன் மனதில் ஓவியமாய் பதிந்து போன நினைவுகள் அவனுக்குள் மெல்ல குமிழியிட்டன.

அப்போது அவர்கள் கடைசி வருடத்தில் கற்றுக்கொண்டிருந்தனர். ஒருநாள், இடைவேளை நேரம் நண்பர்களின் அரட்டைப் பேச்சில் எரிச்சலுற்றிருந்த காங்கேசன், எழுந்து வெளியே வந்தான்.
தொடரும்

கோபிகை
இணைஆசிரியா்
ஒளிஅரசி
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.