சரண் அறிமுகப்படுத்தும் 18ஆவது நாயகி

90களின் இறுதியில் இயக்குநராக அறிமுகமான சரண் காதல் மன்னன்,
அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின் 2017ஆம் ஆண்டு ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கினார். அந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. தற்போது அவர் இயக்கும் புதிய படத்தில் ஆரவ் கதாநாயகனாக நடிக்கிறார்.
கமல்ஹாசன் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தை இயக்கியவர் சரண். தற்போது இவர் இயக்கும் புதிய படத்துக்கும் மார்கெட் ராஜா எம்பிபிஎஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தலைப்பைத் தவிர அந்தப் படத்துக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றாலும் ஆக்‌ஷன், காமெடி, ஃபேன்டஸி கலந்து இந்தப் படம் தயாராக உள்ளது. சரண் இதுவரை ஃபேன்டஸி வகைப்படங்களை இயக்கியது இல்லை என்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தெலுங்கு நடிகை காவ்யா தாப்பர் இந்தப் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தமிழ்த் திரையுலகில் சரண் அறிமுகப்படுத்தும் 18ஆவது கதாநாயகி இவர். மேலும், இந்தப் படத்தில் நாசர், ராதிகா, சாயாஜி ஷிண்டே, யோகி பாபு, பிரதீப் ராவத் என 25க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
சைமன் கே கிங் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். சரணும் அவரது சகோதரரான ஒளிப்பதிவாளர் கே.வி.குகனும் இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக இணைந்து பணியாற்றுகின்றனர்.
Powered by Blogger.