கிழக்கின் ஆளுநர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டால் கூட்டமைப்பு மௌனம் காக்காது


கிழக்கில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் பல்லின சமூகத்துக்குரிய தலைமைத்துவம் இல்லாமல், ஓரின சமூகத்துக்குரியவராக செயற்படும்
பட்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மௌனம் காக்காது என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கிரான் பிள்ளையார் ஆலய முன்றில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அளுநர்களை நியமித்துள்ளார். அளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள் பல்லின சமூகத்தினுடைய தலைவர்களாக செயற்பட்டு சகலருக்கும் அபிவிருத்தி செய்ய வேண்டியவர்களாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்திலும் அதனடிப்படையிலேயே ஆளுநர் நியமனம் நடைபெற்றுள்ளது. இதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது குற்றம் சுமத்துவது தவறான விடயமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாடு எதிர்நோக்கவிருந்த பாரிய ஆபத்தினை தடுத்துள்ளது. ஒக்டோபர் 26 ஆம் திகதி இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது சில ஊடகங்கள் ஒருதலைப்பட்சமாகச் செயற்பட்டன. எதிர்க்கட்சி தொடர்பான எந்த செய்திகளும் வெளியிடப்படவில்லை. அதேநேரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க கூடாது, நடுநிலை வகிக்கக்கூடாது, எமது உறவுகள் காணாமல் போனமைக்கு காரணமானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்றும் தெரிவித்து காணாமல் போனவர்களின் உறவினர்கள் எமக்கு பல கடிதங்களை அனுப்பினார்கள். எதிர்வரும் தேர்தல்களில் எமது மக்கள் கவனமாக செயற்பட வேண்டும். தமது அரசியல் இலாபத்திற்காக பிழையான வதந்திகளை மக்கள் மத்தியில் கூறுவதற்கு  மாற்று அணியினர் தயாராகவுள்ளனர். மக்களின் ஆணையை விற்று சுயநல அரசியல் செய்வதற்கு நாங்கள் தயாராக இல்லை“ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பிப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராசசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.