இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது

இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தேவைப்பட்டால் மட்டும் சர்வதேசம் நமது நாட்டுக்கு உதவிகளை செய்தால் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “சர்வதேச மட்டத்தில் இலங்கையானது, மிகவும் மோசமான ஒரு நாடாக தற்போது சித்தரிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறான செயற்பாடுகளில் சிலர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். இது எமது நாட்டின் நற்பெயருக்கும் நன்மதிப்புக்கும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தற்பொழுது ஐரோப்பிய நாடுகளில்தான் அதிகமாக வசித்து வருகிறார்கள்.
எமது நாட்டுக்குள் ஏனைய மதங்களுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்ற ஒரு அச்சத்தை சர்வதேசத்துக்கு காண்பிக்க இவர்கள் முயற்சித்து வருகிறார்கள். இது உண்மையில் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
எமது நாட்டை ஒரு மரமாக எடுத்துக்கொண்டால் அந்த மரத்தின் ஆணி வேராக நாம் பௌத்தத்தைத்தான் கருத வேண்டும். இந்த ஆணி வேருடன் இணைந்த கிளை வேர்களாக ஏனைய மதங்கள் காணப்படுகின்றன. இவையனைத்தும் நாட்டில் ஐக்கியமாகத்தான் இருந்துவருகின்றன.
இந்தநிலையில், சர்வதேசத்தின் பிரிவினைவாதம் எனும் ஆயுதத்தை நாம் அனுமதிக்க முடியாது. பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி, எமது நாட்டுக்குள் ஒருவருக்கொருவர் சர்ச்சைகளில் ஈடுபட்டுக்கொள்ள சர்வதேச நாடுகள் வழியமைக்கக்கூடாது.
இங்கு சமாதானம் மற்றும் ஐக்கியத்துக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், அதனை பேச்சுக்கள் ஊடாகத் தீர்க்க நாம் தயாராகவே இருக்கிறோம். இதில், சர்வதேசம் தலையிட வேண்டிய அவசியம் கிடையாது.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக்காண மத ரீதியாகவே சில முன்மொழிவுகள் காணப்படுகின்றன. எனவே, எமக்குத் தேவைப்பட்டால் மட்டும் சர்வதேசம் உதவிகளைப் புரிந்தால் போதும். அதைவிடுத்து, எம்மை சீர்க்குலைக்க முற்பட வேண்டாம் என நாம் அந்தத் தரப்பினருக்கு தெரிவித்துக்கொள்ள வேண்டும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.