குழந்தைகளின் உணவும் ஊட்டமும்
குழந்தைப் பருவத்திற்கும் இளமைப் பருவத்திற்கும் இடையே வளர்ந்து வரும் காலங்களில் போதுமான ஊட்டச்சத்து சரியான அளவில் கிடைப்பதென்பது மிக முக்கியமானதொன்றாகும்.


உங்கள் குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைப்பதென்பது, அது வெறுமனே உடல் ரீதியான வளர்ச்சிக்கு மட்டுமல்லாது அவர்களது நோய்யெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதோடு வாழ்நாள் முழுவதும் நல்உணவுப் பழக்கத்தோடு வாழ்வதற்கு சிறந்த அடித்தளமாகவும் அமைகின்றது.

குழந்தைகள் வளர்ந்து வருகின்ற பருவத்திற்கேற்ப அவர்களின் விருப்பு, வெறுப்பு, சுவை,தேவை போன்றன வேறுபடுகின்ற போதிலும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்குவது மிகவும் முக்கிய மானதொன்றாகும்.

இக்காலப்பகுதியில் குறிப்பாக குழந்தைப்பருவத்தில் மருத்துவர் உங்கள் பிள்ளையின் நீளம் அல்லது உயரம்,நிறை மற்றும் தலையின் சுற்றளவின் அதிகரிப்பை மதிப்பிட்டு வளர்ச்சியை தொடர்ந்தும் கண்காணிப்பார். இவ்வாறு கண்காணிக்கையில் குழந்தையில் ஏற்படக்கூடிய குறைபாடு அல்லது அதிக எடைபோடுதல் போன்ற காரணிகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யக் கூடியதாக அமையும்.

குழந்தைகளிற்கு விசேடமாக 12 மாதங்களிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தாய்ப்பாலே அதி சிறந்த உணவாகும்.
வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு தேவையான கனிப்பொருட்கள்,விற்றமின்கள, கொழுப்பு, புரதம் மற்றும் சக்தியை உகந்த விதத்தில் இவ் உன்னதமான தாய்ப்பால் வழங்குகின்றது. அது மட்டு மல்லாது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையிலான மேன்மையான உணர்வுப் பிணைப்பினை யும் ஊக்குவிக்கின்றது. குறைந்தது பிறந்த நாள் முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் மட்டுமே குழந்தையின் பரிபூரண வளர்ச்சிக்கு போதுமானதாகும்.

இவ்வாறாக உங்கள் குழந்தை வளர்ந்து வருகையில் குழந்தை யின் வயது ஆறு மாதங்களை அண்மிக்கையில் குழந்தைஉங்களைப் போல் சுவையான உணவுகளை உண்பதற்கு திண்ம உணவுகளை அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற நேரங்களில் பலபெற்றோர், உறவினர்கள்.நண்பர்களின் வித்தியாசமான ஆலோசனைகளினால் குழப்பங்களிற்கு உள்ளாகின்றனர்.

இந்த நேரத்தில் குழந்தையின் வைத்தியர், போசனையியல் ஆலோசகர் போன்றவர் களினால் பிள்ளைகளிற்கு எவ்வகையான உணவுகளை எக்காலப்பகுதியில் வழங்கலாம் போன்ற ஆலோசனைகளை
வழங்க முடியும்.

No comments

Powered by Blogger.